கரூர் வழக்கில் சிபிஐக்கு மாற்றிய தீர்ப்பில் பல்வேறு சட்ட மீறல்கள் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தன்னுடைய பதில் மனுவில் இதை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் வலியுறுத்தியுள்ளார்.


கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது தொடர்பாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு வழங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த மூத்த நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, 2 நாட்கள் கழித்து இதேபோன்று சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். உத்தரபிரதேச சட்டமேலவை செயலகத்திற்கு பணியாளர் நியமனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்துவிட்டார். அவருடைய தீர்ப்பில், காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றுகிற அதிகாரத்தை மிகவும் அரிதான, மிகவும் விதி விலக்கான சம்பவங்களில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், மனுதார் பொதுப்படையாக காவல்துறையினர் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லும்பட்சத்தில், அதை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக்கூடாது என்றும் சொல்லியுள்ளார். நீதிபதி மகேஸ்வரியின் இந்த தீர்ப்பை வாசிக்கும்போது, தமிழக அரசின் எஸ்.ஐ.டி வழக்கில் வழங்கிய தன்னுடைய தீர்ப்பை அவரே விமர்சிப்பது போன்று அமைந்துள்ளது.

இது குறித்து மூத்த வழக்கறிஞர் வில்சனின் மகன் ரிச்சர்ட்சன் வில்சன், பார் அன்ட் பென்ச் இணைய இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஒரு வழக்கை சிபிஐக்கு மாற்றுகிற அதிகாரம் இரு அரசமைப்பு நிறுவனங்களுக்கு இருக்கிறது. ஒன்று உயர்நீதிமன்றம். மற்றொன்று உச்சநீதிமன்றம். கரூர் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் வழக்கில் தற்போது தான் விசாரணை தொடங்கி இருப்பதால், அதனை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று சொன்னார்கள். ஆனால் அதை நிராகரித்து உச்சநீதிமன்றம் சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது. கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு 3 காரணங்களை உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. முதலாவது இந்த வழக்கில் அரசியல் பின்புலம் இருக்கிறது. இரண்டாவது அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசியதால், எப்படி நியாயமான விசாரணை நடக்கும்? மூன்றாவது மக்களுக்கு விசாரணை மீது நம்பிக்கையை ஏற்படுத்த சிபிஐ வசம் விசாரணையை கொடுக்க வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ரிச்சர்ட்சன், உச்சநீதிமன்றத்தின் 3 கருத்துக்களும் தவறு என்று சொல்கிறார். மத்திய அரசு, அரசியல் உள்நோக்கத்துடன் மாநில அரசை அணுகுவதாக தெரிவிக்கிறார். கரூர் விவகாரத்தில் முதலில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தவர் பாஜக வழக்கறிஞர் அணியை சேர்ந்த ஜி.எஸ். மணி ஆவார். எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்கிற அரசியல் உள்நோக்கம் பாஜகவுக்கு இருக்கிறது. கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டதால், அதை மறுத்து உண்மைகளை தெரிவிக்க அவர்கள் பேச வேண்டி இருந்தது. அதன் காரணமாகவே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. எனவே அதை ஒரு காரணமாக எடுத்துக்கொண்டது அடிப்படை அற்றது. நியாயம் அற்றதாகும். சட்டவிரோதமானது. மூன்றாவது நடுநிலையில் சந்தேகம் இருப்பதாக நீதிமன்றம் சொல்வதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. எஸ்.ஐ.டி விசாரணையை ஆய்வு செய்து, அதில் என்ன நடுநிலை தவறி இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் பார்க்கவில்லை. எதையும் பார்க்காமலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். எனவே இந்த இடைக்கால உத்தரவுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றை பிஎன்எஸ் சட்டத்தில் அப்படி ஒரு குழு கண்காணிப்பதற்கு எந்த ஒரு பிரிவும் கிடையாது. சிபிஐ அமைப்பு உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி, அவர்களை கண்காணிக்க எந்த அமைப்பிற்கும் அதிகாரம் கிடையாது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எந்த விதமான முகாந்திரமும் கிடையாது என்பது தெரிந்துவிடும். தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவில் இடம்பெற வேண்டும் என்று உத்தரவில் சொல்லப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் எந்த ஒரு வழக்கிலும் இப்படிபட்ட ஒரு தீர்ப்பை வழங்கியது இல்லை. இந்த தீர்ப்பு ஆர்ட்டிகள் 15க்கு எதிரானது ஆகும். உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு குறித்து விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஒரு தீர்ப்பு தவறு என்றால்? அதை ரத்து செய்யலாம். விமர்சனத்தை முன்வைக்கலாம். ஆனால், விளக்கம் கேட்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு கிடையாது. அந்த அடிப்படையிலும் இந்த தீர்ப்பு முறைகேடானது என்று ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு அவசர அவசரமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு பதில் அளிக்க 8 வார காலம் அவகாசம் வழங்கி இருக்கிறது. தமிழக அரசு இந்த தீர்ப்பை மிக கடுமையாக எதிர்த்து, இது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதை வலிமையான முறையில் வாதாட வேண்டும். தமிழர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட இந்த தீர்ப்புக்கு எதிராக ஒரு மக்கள் இயக்கமாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்.


