கரூர் துயர சம்பவத்திற்கு தன்னை காரணமாக கூறி, கூட்டணிக்கு வற்புறுத்தும் பாஜக, அதிமுக கூட்டணியுடன் விஜய் ஒரு போதும் கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :- திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தவெகவை ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் சொல்றார். இதன் மூலம் திமுகவை எதிர்கொள்ள அதிமுக, பாஜக கூட்டணிக்கு போதுமான வலிமை இல்லை என்பது தெரிகிறது. திமுக ஆட்சியை வீழ்த்த விஜய் துணை வேண்டும் என்று உதயகுமார் சொல்கிறார். விஜயிடம் நிரூபிக்கப்பட்ட வாக்கு வங்கி இல்லை. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தவெகவுக்கு கட்சி கட்டமைப்பு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. தேர்தல் நேரத்தில் நட்சத்திர அந்தஸ்து இருந்தால் மட்டும் வெற்றி பெற முடியுமா? தேர்தல் நேரத்தில் களப்பணி ஆற்றுவதற்கு செயல் வீரர்கள் வேண்டும் அல்லவா? அப்போது உதயகுமார் சொல்வது, விஜய் என்கிற நட்சத்திர முகத்தை தான் தங்கள் கூட்டணிக்கு வரச் சொல்கிறார்.
பாஜக, அதிமுக, தவெக ஆகிய மூன்று கட்சிகளும் திமுகவை வீழ்த்த ஒன்றிணைகின்றன. அடுத்தபடியாக யார் முதலமைச்சர் என்கிற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது என்று சொல்கிறார். அதேவேளையில் பாஜக எடப்பாடி பழனிசாமியை இன்னும் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை. எனவே 2வது முதலமைச்சர் கேள்வி குறி. 3வது முதலமைச்சர் வேட்பாளர் தவெக. விஜய் தலைமையில் ஆட்சி. தனிப்பெரும்பான்மை வந்தாலும் ஆட்சியில் பங்கு தருவோம் என்கிறார்கள்.

பவன் கல்யாண் போன்று விஜய் துணை முதலமைச்சர் ஆகலாம் என்கிறார்கள். இது எடப்பாடியில் ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது என்கிற நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானதாகும். உதயகுமார் சொல்வது என்பது, விஜய், முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற ஆசையை மட்டும் தியாகம் செய்துவிட்டு துணை முதலமைச்சர் ஆக வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற திட்டம் என்றுதான் புரிந்துகொள்கிறேன். அந்த திட்டத்தை அதிமுக அடிமட்ட தொண்டர்கள் நிராகரிப்பார்கள். உதயகுமாருக்கு மேலே உள்ள தலைவர்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை.
ஏனென்றால் இதுபோன்ற திட்டத்திற்கு எந்த தலைவர்களும் வர மாட்டார்கள். தவெக அமைதியாக இருப்பதற்கான காரணமும் இதன் மூலம் தெரிகிறது. அப்படி துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வார்கள் என்றால் தவெக என்கிற கட்சியே காணாமல் போய்விடும். விஜய் முதலமைச்சராவதை அவரது கட்சியினரும், ஆதரவாளர்களும் விரும்புவார்கள். எனவே உதயகுமாரின் கோரிக்கை தவெக மற்றும் அதிமுக மூத்த தலைவர்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விட்டது.

கரூர் சம்பவத்திற்கு விஜய் தான் காரணம் என்று, அவருக்கு பாஜக, அதிமுக நெருக்கடி கொடுக்க முயற்சின்றன. ஆனால், விஜய் தான் சம்பவத்திற்கு காரணம் இல்லாதபோது, அதை வைத்து நெருக்கடி கொடுக்கப் பார்க்கிறார்கள் என்று நினைப்பார். அப்போது விஜய் எப்படி அவர்களுடன் கூட்டணி சேருவார். தமிழ்நாட்டில் எந்த பிரதான கட்சியும் 170 சீட்டுகளில் நின்றால் தான் தனிப் பெரும்பான்மை கிடைக்கும். 140 இடங்களில் நின்று தனி பெரும்பான்மை அடைந்தவர் ஜெயலலிதா மட்டும் தான். அதிமுகவினர், தவெகவுக்கு கூட்டணி அழைப்பு விடுப்பதன் மூலமாக அக்கட்சியில் உள்ள கீழ் மட்டத் தொண்டர்களும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களும் விஜய் பக்கம் செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே அதிமுகவை ஒரு அபாய விளிம்புக்குள் கொண்டுசென்று ஆர்.பி.உதயகுமார் நிறுத்துகிறார்.
2011ல் விஜயகாந்த் கூட்டணிக்கு வந்தது போல, விஜயும் கூட்டணிக்கு வருவார் என்று அதிமுக எதிர்பார்க்கிறது. ஆனால் விஜயகாந்திடம் ஒருங்கிணைக்கப் பட்ட கட்சி கட்டமைப்பு இருந்தது. அவர்களை மற்ற கட்சியினரும் ஏற்றுக்கொண்டார்கள். விஜய் கட்சி குறைந்தபட்சம் 2 தேர்தல்களிலாவது போட்டியிட வேண்டும் . அப்போது தான் மற்ற கட்சிகள் ஏற்றுக்கொள்வார்கள், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


