மாநிலங்களவையில் வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேறி உள்ளது. ஆதரவாக 128 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 95 வாக்குகளும் பதிவாகின. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவையில் மொத்தம் 18 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 10 பேர் திமுக, 4 பேர் அதிமுக, ஒருவர் மதிமுக, ஒருவர் காங்கிரஸ், ஒருவர் தமாகா , ஒருவர் பாமக…
இந்த 18 பேரில் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக ஆகிய 16 பேர் வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக வாக்களித்து உள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.கே.வாசன், பாஜக கொண்டு வந்துள்ள இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். பாமகவின் அன்புமணி ராமதாஸ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். அதாவது ஆதரவும் தெரிவிக்கவில்லை, எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்பு மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது பாமக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஆனால் நாடாளுமன்றத்தில் ஏன் அன்புமணி அவ்வாறு செய்யவில்லை. ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி வைக்க நேரிட்டால் இது ஒரு பேசுபொருளாகக் கூடும் என்ற எண்ணமா? எதற்காக இந்த இரட்டை நிலைப்பாடு.
பாஜகவுடன் கூட்டணி என்று அமித் ஷாவே பகிரங்கமாக அதிமுக பற்றி பேசுகிறார். இபிஎஸ் அவரைச் சென்று சந்திக்கிறார். செங்கோட்டையன் இரண்டு முறை சென்று சந்திக்கிறார். ஆனால் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்பதில் அதிமுக எவ்வளவு உறுதியுடன் இருக்கிறது. அதிமுகவினர் வக்பு சட்டத்திருத்ததிற்கு எதிராக வாக்களித்துள்ளனரே. ஏன் அன்புமணி எதிர்த்து வாக்களிக்கவில்லை?
அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்து தான் அன்புமணியை ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதிமுக உறுப்பினர்கள் வக்பு சட்டத்திற்கு எதிராக வாக்களித்த நிலையில், அன்புமணி புறக்கணித்துள்ளது வியப்பாக உள்ளது.
ஜி.கே.வாசனைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. அவரும் அதிமுகவால் தான் ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் கடந்த சில வருடங்களாகவே பாஜகவின் ஊதுகுழலாகத் தான் அவர் செயல்பட்டு வருகிறார். சுயமரியாதையோடு செயல்பட்டு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு எதிராகவே தனிக்கட்சி கண்ட ஜி.கே.மூப்பனாரின் வாரிசா இவர் என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியில் யார், யார் இருக்கப் போகிறார்கள் என்பதற்கு அச்சாரமாக இது திகழ்கிறது.