திமுக ஆட்சியை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தை நடத்தினார். இது அரசியலில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் தனது எக்ஸ் தளப்பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘‘தெருக்களில் செருப்பு அணிய அனுமதி மறுக்கப்பட்ட சமூகங்களுக்காக போராடி நீதியைப் பெற்றுக் கொடுத்த மண் இது.

தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டுள்ள குடும்ப வாரிசுகளை தேடிப் பிடித்து பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் மாநிலம் இது. எமர்ஜென்சியின் போது பத்திரிக்கைகள் சுதந்திரமாக இயங்க தடை செய்யப்பட்டபோது கூட, கையெழுத்து பிரதிகள் வாயிலாக பரப்புரை செய்த ஊர் இது.
போராட்ட வடிவங்களில் கூட அறிவுசார் போராட்டங்களை அப்போதே நடத்திக் காட்டிய மாநிலம் தமிழ்நாடு. கவன ஈர்ப்புப் போராட்டங்கள் என்கிற பெயரில் பின்னோக்கிப் போகாதீர்கள். ஆமாம்., அறுபடை வீடுகளுக்கும் சென்று எம்பெருமான் முருகனிடம் திமுக அரசைப் பற்றி முறையிடவா, லண்டன் வரை அரசியல் படிக்கப் போனீர்கள்?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
https://x.com/nelsonvijay08/status/1872241229615800782
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக நிர்வாகி எஸ்.ஆர்.சேகர், ‘தம்பி நெல்சன் சேவியர்… எமர்ஜென்சியின் போது, உரிமைகள் மறுக்கப்பட்ட போது நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்த மண் இது என்று சொன்னீர்களே… அதை யார் செய்தார்? நீங்கள் இருக்கின்ற இயக்கத்தில் யாராவது செய்தார் என்று சொல்லுங்கள்?
அன்று இருந்தவன் நான் அன்று செய்தவன் நான். அன்று செய்தவர்கள் நாங்கள். யார் நாங்கள்? அதுதான் ஆர்எஸ்எஸ். அது உங்களுக்கு தெரிந்திருக்காது. ஆகவே உண்மையை தெரிந்து பேசுங்கள். உண்மைக்கு புறம்பாக பேசுவதையே வழக்கமாக கொள்ளாதீர்கள். உங்களோடு அன்று இருந்தவர்கள், இன்று இருப்பவர்கள் அதாவது நீங்கள் யாரோடு எல்லாம் இன்று இருக்கிறீர்களோ? அவர்கள் எல்லோரும் எமர்ஜென்சியை ஆதரித்து எழுதிக் கொடுத்து வந்தவர்கள்.
20 அம்சத் திட்டத்தை ஆதரிக்கிறேன் என்று விளம்பரம் கொடுத்து வெளியே வந்தவர்கள். கருப்பு சிவப்பு கலர் வேட்டி கரையை கத்தரிக்கோலால் கட் செய்து கட்சியில் நான் இல்லை என்று ஓடி ஒளிந்தவர்கள். இதுதான் உண்மை தெரிந்து கொள்ளுங்கள்’’ எனக் கூறியுள்ளார்.