சமூக சமத்துவத்தை நிலை நாட்டுவதில் திராவிட மாடல் அரசின் காலம் பொற்காலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை மூலமாக சென்னை கலைவாணர் அரங்கில் சமத்துவ விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பங்கேற்றார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு கமிட்டியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப் பெருந்தகை மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய விடுதி, பள்ளி கட்டடங்கள், சமுதாயக்கூடங்கள், கற்றல் கற்பித்தல் அறைகள், ஆயிரம் பழங்குடியினர் வீடுகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் 49 ஆயிரத்து 542 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இதற்கு முன்பாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைவர்களை கொண்டாடுகின்ற அதே வேளையில், அவர்களின் கொள்கைகளை அடுத்த அடுத்த தலைமுறைக்கும் நாம் கொண்டு சேர்க்க வேண்டும். அதை மனதில் வைத்து தான் நம்முடைய முதலமைச்சர், அயராது உழைத்து வருவதுடன், திட்டங்களை தீட்டி வருகிறார் என்றார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தங்கை அரியலூர் அனிதா நீட் தேர்வினால் 2017-இல் உயிரிழந்தது நம் அனைவருக்கும் தெரியும். நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி. எனவே தான், நீட்டுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை, நம்முடைய அரசு தொடர்ந்து நடத்தி வருகின்றது. அன்றைக்கு மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய, தங்கை அனிதாவுக்கு அனுமதி இல்லை.
ஆனால், இன்றைக்கு அனிதா பிறந்த அரியலூரில் மருத்துவக்கல்லூரி அரங்கத்திற்கு, அவருடைய பெயரை சூட்டி அழகு பார்த்தது நம்முடைய திராவிட மாடல் அரசு. நம்முடைய முதலமைச்சர் அவர்கள். இதற்கு பெயர் தான், சமூகநீதி.
இந்த உணர்வு நம்முடைய உள்ளங்களில் இருக்கின்ற வரை, தமிழ்நாட்டை யாராலும் பிரித்தாள முடியாது. ஆனாலும், நம்மை பிரித்தாளுகின்ற முயற்சிகள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த சூழ்ச்சிகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றை முறியடிக்க வேண்டும் என்று கூறினார்.
இன்றைக்கு கலைஞர் அவர்கள் வழியில், அண்ணல் அம்பேத்கருடைய லட்சியங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பவர் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். பட்டியலின – பழங்குடியின மக்கள் சமூக ரீதியாக விடுதலை பெற வேண்டும். அதுமட்டுமல்ல, பொருளாதார விடுதலையையும் அவர்கள் அடைய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து பேசிய அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், அம்பேத்கரின் பிறந்த நாளை தமிழ்நாடு அரசு சமத்துவ நாளாக கொண்டாடுவதற்கும், தன்னை இந்த விழாவிற்கு அழைத்ததற்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகள் குறைவாக இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அதோடு ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றார்.
மேலும், சமூக நிதி இருக்கும் வரை நம்பளை பிரிதாள முடியாது என்றும் அம்பேத்கரின் உடைய ஜாதியை ஒழித்தல் அளித்தல் மற்றும் இந்து மதத்தின் புதிர்கள் என்ற இரண்டு புத்தகங்களை முதலமைச்சர் வெளியிட்டு இருப்பது இன்றைய சமூக சூழலில் அவசியம் என்றும் அவர் கூறினார்.
விழாவில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர், கல்வியும் – படிப்பும், வேலையும் – பதவியும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கையில் அதிகாரத்தை கொடுத்திருக்கிறது. கல்வி, வேலை, அரசாங்கம், அதிகாரம், நிர்வாகம், அறிவு என எல்லாமே ஜனநாயகமயமாக மாறிவிட்டது. சாதிதான்,தமிழினத்தை பிளவுபடுத்தும் முதலாவது சக்தி! சாதி எனும் ஆயிரமாண்டு அழுக்கை ஒழிக்கத்தான். நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கோம். நாம் அனைவரும் தமிழர்கள் என உணர வைப்பதுதான் நம் நோக்கம்! ஒடுக்கப்பட்டோரின் கல்வி, சமூக, பொருளாதார உயர்வுக்கான அனைத்து உரிமைகளையும் திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது.
சமூக – சமத்துவத்தை நிலைநாட்டுவதில் திராவிட மாடல் ஆட்சிக்காலம்தான் பொற்காலம் . சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவச் சமுதாயம் அமைய வேண்டும். வெறுப்பரசியலை விட அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது – ஆற்றல் வாய்ந்தது! தமிழ் – தமிழர் என்ற உணர்வுதான் நம்மை ஒன்றிணைக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
எதிரிகளையும் – எதிரிகளின் பரப்புரைகளையும் அடையாளம் கண்டாலே, அந்தத் தடைகளை உடைப்பது எளிதாகிடும். சமூகப் பணிகளாலும் – சட்டப் பணிகளாலும் சமத்துவத்தை நோக்கிய நகர்வுகளை சாத்தியப்படுத்துவோம்.பெரியார் – அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள். தந்திருக்கும் அறிவொளியில் மக்களோடு பயணிப்போம். பொது உடைமை – சமத்துவம் – சமூகநீதி கொண்ட சமுதாயத்தை உருவாக்க அம்பேத்கர் பிறந்தநாளில் உறுதியேற்போம் என்று உரை நிகழ்த்தினார்.
இதற்கு முன்பாக பேசிய தொல் திருமாவளவன், இந்தியாவிலேயே அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் அறிவிப்பு என்று பெருமை தமிழ்நாடு முதலமைச்சரையே சாரும் என்றும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக முதலமைச்சர் விளங்கி வருகிறார்.அரசியலமைப்பை பாதுகாக்கும் தலைவராக முதலமைச்சர் இருக்கிறார். சமத்துவத்தை பாதுகாப்பதில் பொறுப்புணர்வோடு எதிர் கொள்ளும் தலைவராக, பாதுகாக்கும் தலைவராக போராடி வருகிறார் முதலமைச்சர் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.இதே போல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது, தமிழ்நாட்டு மக்களின் இறையாண்மை காப்பதில் சிறப்பாக செயல்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெற்று தந்திருக்கிறார் முதலமைச்சர். இந்தத் தீர்ப்பு அம்பேத்கரின் கனவை நனவாக்கியதாக நாங்கள் பார்க்கிறோம். யார் நேர்மையாக ஆட்சி நடக்கிறார்களோ அவருக்கு எதிரான முறையில் ஒன்றிய அரசு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதியுடன் நின்று செயல்படுவதாக அவர் கூறினார்.
ரூபாய் 44.50 கோடி செலவில் கட்டப்பட்ட நவீன மாணவர் விடுதி – முதல்வருக்கு தலைவர்கள் பாராட்டு