பாமக நிறுவனர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் அரசியல் ஆதாயம் தேட பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக ரிஷிவந்தியம், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்றால் அன்புமணி அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த இரண்டு தினங்களாக சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் காரச் சாரமாக பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே கள்ளக்குறிச்சியில் இறந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்ற அன்புமணி ராமதாஸ், கள்ளச்சாராய வியாபாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தலைமை செயலகம் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்பொழுது பேசிய எம்எல்ஏக்கள், தோல்வியின் விரக்தியில் ராமதாசும், அவருடைய மகன் அன்புமணியும் பேசி வருவதாக திமுக எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மேலும் எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது வாழ்வில் இருந்து விலகத் தயார் என்றும் பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி, இறந்தவர்கள் வீட்டில் அரசியல் ஆதாயம் தேடும் ராமதாஸ் மற்றும் அன்புமணி அரசியலில் இருந்து விலகத் தயாரா என்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி
விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதமாக செயல்பட்டு வருகிறார். அதை மறைத்து விட்டு தேர்தல் காலத்தில் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் ஒட்டுவது வழக்கம் என்றும், அதேபோன்று தான் அந்த தெருக்களிலும் திமுக துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதை வைத்து தேவையற்ற குற்றச்சாட்டுகளை அன்புமணி வைப்பதாக எம்எல்ஏகள் தெரிவித்துள்ளனர்.
19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து மூவர் இறந்த செய்தி தெரிந்தவுடன் திமுக சார்பில் எம்எல்ஏக்களும் வட்டாட்சியர் உள்ளிட்ட அனைவரும் அந்த இடத்திற்கு சென்று விட்டோம். மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் சென்று சிகிச்சை பெற்றவர்களை பார்த்து நலம் விசாரித்தோம் என்றார்கள்.
மேலும் முதலமைச்சர் 24 மணி நேரத்தில் அமலாக துறையில் உள்ள கூடுதல் டிஜிபியை மாற்றி உள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவரை பணிஇடம் மாற்றம் செய்துள்ளார். எஸ் பி அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் .
10க்கு மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இரும்பு கரம் கொண்டு யார் யார் இந்த பின்னணியில் இருக்கிறார்களோ அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளளார்.
அதுமட்டுமின்றி இறந்து போன குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். தாய் தந்தையை இழந்துள்ள பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வங்கியில் வைப்பு தொகையாக 5 லட்சம் ரூபாய் மற்றும் பராமரிப்பு செலவாக மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். இவ்வாறு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தெரிவித்துள்ளார்.