கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை எழும்பூர், தாளமுத்து நடராஜர் மாளிகையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வரும் மதுவிலக்குத்துறைக்கு உட்பட்ட டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை முதல் கேரளாவில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூரில் மூன்று இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கரூர் ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணி என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வருகிறது. அதேபோல் காந்திபுரத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் என்பவர் வீட்டிலும், கரூர் காயத்ரி நகரில் உள்ள சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவர் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.
இவர்கள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் நான்கு குழுக்களாக பிரிந்து அமலாக்கத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் திமுக எம்.பி. ஜெகத் ரட்சகனுக்கு சொந்தமான சென்னை பாண்டி பஜாரில் உள்ள நிறுவனத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை எழும்பூர், தாளமுத்து நடராஜர் மாளிகையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது தொடர்பாக பேசிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், “தமிழ்நாட்டில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் துறையின் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில்தான் கரூரில் மூன்று இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.