அமித்ஷாவை சந்திக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ்
நாளை இரவு தமிழ்நாட்டுக்கு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கூட்டணிக் கட்சி தலைவர்கள் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆயத்தமாகிவருகின்றன. குறிப்பாக பாஜக தமிழகத்தில் காலூன்ற திட்டமிட்டுவருகிறது. இந்த சூழலில் வேலூரில் 11ம் தேதி நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வர உள்ளார். நாளை இரவு கூட்டணி கட்சி தலைவர்கள் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தெரிகிறது.

அந்தவகையில் சென்னை கிண்டி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஈபிஎஸ், ஓபிஎஸ் தவிர த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தெரிகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக கடந்த சில மாதங்களாகவே பாரதிய ஜனதா கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று சமீபத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பாஜக மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிமுகவின் பல தலைவர்கள் அதனை வரவேற்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர் என்பது குறிப்பிடதக்கது.


