மறைந்த நாகை எம்.பி. எம்.செல்வராஜின் உடல் அடக்கம்
மறைந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லியை சேர்ந்த இவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்நிலை நிர்வாக குழு உறுப்பினராகவும் நான்கு முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.செல்வராஜ் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான திருவாரூர் சித்தமல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட உடலுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, திருப்பூர் எம்.பி. சுப்பராயன், நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை.செல்வராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கொட்டும் மழையிலும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இதை தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து தோட்டம் வரை நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இறுதி ஊர்வலத்திற்கு பிறகு அங்குள்ள தோட்டத்தில் செல்வராஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.