”மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை சந்திக்க ஓபிஎஸ் திட்டம்”
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளது சிறுப்பிள்ளைத்தனமானது. திடீர் சாம்பார், ரசம் போன்று தேர்தலை அறிவித்துள்ளார். தேர்தல் என்றால் முறையான உரிய கால அவகாசத்துடன் நடைபெற வேண்டும். அதிமுகவில் தேர்தல் நடத்துவதற்கு என சட்ட விதிகள் உள்ளன. விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துவது, சட்ட விதிகளை மாற்றுவது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இனி திருந்துவார்கள் என நினைக்கவில்லை. அதிமுகவை சீர்குலைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செயல்படுகின்றனர். மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தியுள்ளனர். நீதிமன்றங்கள் நோக்கி இத்தனை நாட்கள் பயணித்தோம். இனி மக்கள் மன்றத்தை நோக்கி பயணிப்போம். மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ் சந்திக்க உள்ளார். மக்கள் மன்றத்தில் தோல்வியை சந்தித்தபோதும் இ.பி.எஸ் தரப்பு திருந்துவதாக இல்லை. எதிர்பாராத வகையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. நேரம் வரும்போது அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்” எனக் கூறினார்.