பிரதமர் மோடி, அண்ணாமலை ஆகிய இருவரும் ஜோக்கர் தான், இந்த தேர்தலில் மோடியின் பிம்பம் உடைக்கப்பட்டு விட்டது என அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிறுவர் விளையாட்டுத் திடலில் விளையாட்டு வீரர்களுக்கு திமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் ,சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,பாஜகவினர் 300 இடங்களில் வெற்றி பெற்ற போதே அவர்கள் நினைத்ததை எல்லாம் செய்ய துடித்தார்கள். 400 இடங்களை கைப்பற்றி இருந்தால் இந்தியாவையே தலைகீழாக மாற்றி இருப்பார்கள்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலையை ஜோக்கர் என்றார், அண்ணாமலை மட்டும் ஜோக்கர் கிடையாது மோடியும் ஜோக்கர் தான்.மோடியின் பிம்பம் உடைக்கப்பட்டு விட்டது.சந்திரபாபு நாயுடு வையும் நிதிஷ்குமாரையும் நம்பி ஆட்சி அமைக்க உள்ளனர். இன்னும் ஒரு வருடத்தில் அவர்களின் முகம் தெரியும் என்றார்.
தொடர்ந்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் செய்தியாளர் சந்தித்தார்.தமிழக இளைஞர்களை ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயார் படுத்தும் விதமாக திமுக தலைவர் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.
மேலும், விஜயபிரபாகரன் போன்ற ஒரே ஒரு இளம் வேட்பாளரை கூட ஜெயிக்கவிட மனமில்லையா என்ற பிரேமலதா விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில்லளித்த தயாநிதிமாறன்,பிரேமலதா விஜயகாந்த் ஒரு அம்மாவாக அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். மக்கள் தான் வாக்களித்தனர் தமிழக அரசு தேர்தலை நடத்தவில்லை என விமர்சித்தார்.