
ஜெயலலிதா போட்ட அரசியல் கணக்கை எடப்பாடி பழனிச்சாமி டீமும் போட்டு பார்த்து வருகிறது என்கிறது அதிமுக வட்டாரம். ஆனால் ஜெயலலிதாவுக்கு 2014 ஆம் ஆண்டில் இருந்த சாதகமான நிலை தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்பதால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் இடியாப்ப சிக்கலில் இருக்கிறார் எடப்பாடி.
ஒருங்கிணைந்த அதிமுகவிற்கு ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது என்று பிடிவாதமாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி . ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால்தான் தமிழகத்தில் சட்டமன்றத்தில் நான்கு சீட் கிடைத்தது போலவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சில எம்பிக்கள் கிடைப்பார்கள் என்று பாஜக கணக்கு போடுகிறது. ஆனால் அதற்கு எடப்பாடி இடம் தராததால் அந்த கடுப்பில் தான் அண்மை காலமாகவே அதிமுகவை அதிகம் விமர்சித்து வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை . இதன் உச்சமாக ஜெயலலிதா குற்றவாளி என்று அண்ணாமலை சீண்டிப் பார்த்ததும், சும்மா பார்த்துக் கொண்டிருக்கவில்லை அதிமுகவினர். பதிலுக்கு வரிந்து கட்டிக்கொண்டு, இஷ்டம் இருந்தால் கூட்டணியில் இருங்கள் . இல்லை என்றால் வெளியேறுங்கள் என்கிறார்கள்.


நாளுக்கு நாள் வலித்து வரும் அதிமுக -அண்ணாமலை மோதலால் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு எடுத்து இருக்கிறது எடப்பாடி டீம். ஒருவேளை இந்த முடிவை எடப்பாடி உறுதிப்படுத்தி விட்டால் தற்போது கூட்டணியில் இருக்கும் பாமக, தமாக, புரட்சி பாரதம், தேமுதிக, புதிய நீதி கட்சி, ஐ .ஜே. கே, புதிய தமிழகம், தமமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியேறி பாஜக பக்கம் செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளன . அப்படி ஒரு நிலை வந்து விட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி , காங்கிரசை தங்கள் அணிக்கு கொண்டு வந்து விடலாமா என்றும் ஒரு கணக்கு போடுகிறது எடப்பாடி டீம்.
இந்த கணக்கு ஒரு வேளை சரியாக அமையவில்லை என்றால் பேசாமல் அதிமுக தனித்து போட்டியிடலாம். அப்படி ஒரு நிலை என்றால் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விடலாம் என்று நினைக்கிறது. எடப்பாடி டீ ம். கடந்த 2014 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதா முன்னிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் தான் மோடியா லேடியா என்று ஜெயலலிதா சவால் விட்டுப் பார்த்தார் .

அந்த தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களை பெற்று விட்டால் பிராந்திய கட்சிகள் பலவற்றை ஒருங்கிணைத்து தான் பிரதமராகி விடலாம் என்று ஜெயலலிதா நினைத்திருந்தார். ஆனால் அந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விட்டது. அப்போதும் கூட இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது அதிமுக. தனது பிரதமர் வேட்பாளர் கனவு பலிக்காமல் போனாலும் தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றதில் ரொம்பவே மகிழ்ச்சியில் இருந்தார் ஜெயலலிதா .
ஜெயலலிதாவுக்கு அன்றைக்கு இருந்த அந்த சாதகமான சூழ்நிலை தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்று சொல்லலாம் . அதனால் அவர் பாஜகவை விட்டு விலகி புதிய கூட்டணி அமைப்பதா?, இல்லை தனித்துப் போட்டியிட்டு பிரதமர் வேட்பாளராக ஆவதா?என்ன முடிவு எடுப்பது என்பது தெரியாமல் சிக்கித் தவிக்கிறார் .ஆனால் அண்ணாலைக்கு இணையாக அதிமுகவினர் போகுற வேகத்தை பார்த்தால் கூட்டணி உடைபடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது. இதைத்தான் அதிமுகவில் இருந்து அதிமுகவில் ஓபிஎஸ் அணியில் இருக்கும் அழகு மருதராஜ், ‘’ எடப்பாடி தான் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்றதுக்கப்புறம், மோடியை முன்னெடுத்து வரும் பா.ஜ.க.வோடு அதே எடப்பாடியின் பைனான்ஸ் கம்பெனி எப்படி கூட்டணி வைக்க முடியும்.? 2500பொதுக்குழு உறுப்பினர்களை கொண்டே பிரதமராக எடப்பாடியை தேர்வு செய்யும் வகையில், அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்துமாறு குடியரசுத்தலைவரை வலியுறுத்த எடப்பாடியின் பைனான்ஸ் கம்பெனி முடிவு . எடப்பாடி தனக்கு தந்த இன்னோவா காரிலேயே டெல்லி செல்கிறார் தமிழ்மகன் உசேன்’’என்று ஒரே போடாக போட்டுவிட்டார் .

அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையனோ, தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வரக்கூடிய தகுதி உடைய ஒரே நபர் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி தான் என்கிறார். இதனால் அன்று மோடியா? லேடியா? என்று பிரச்சாரம் செய்தது போல், இன்று மோடியா? எடப்பாடியா? என்று பிரச்சாரம் செய்யவும் அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர் . ஆனால் இதை கொஞ்சம் கூட ரசிக்கவில்லை பாஜக. ஜெயலலிதா அன்றைக்கு அந்த பிரச்சாரத்தை செய்த போது எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தது பாஜக . ஆனால் இன்றைக்கு எல்லாமும் அவர்கள் தான் என்பதால் எடப்பாடியின் இந்த பிரச்சார முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டு விடும் என்றே கருதுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.


