Homeசெய்திகள்அரசியல்மோடி உங்களை அழைக்காமல் மு.க.ஸ்டாலினை அழைத்ததால் கோபமா? தமிழிசைக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி

மோடி உங்களை அழைக்காமல் மு.க.ஸ்டாலினை அழைத்ததால் கோபமா? தமிழிசைக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி

-

மோடி உங்களை அழைக்காமல் மு.க.ஸ்டாலினை அழைத்ததால் கோபமா? தமிழிசைக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி

சகோதரி தமிழிசை அவர்களுக்கு ஆளுநர் என்ற முறையில் தன்னை அழைக்காமல் பிரதமர் விட்டுவிட்டாரே என கோபமா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழிசை மோடி

இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது தெலங்கானா மாநில ஆளுநர் அருமை சகோதரி தமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை!? மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் தளபதி அவர்களை வம்புக்கு இழுத்து, “பாரதியாருக்கு மரியாதை செலுத்தத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நேரமில்லையா” என்று கேட்டிருக்கிறார்.

அத்தோடு நிற்கவில்லை அவர். “அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் கைகுலுக்கத் தெரிந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு” என்று கூறியிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கைகுலுக்கிய இடம், ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வும், அந்த ஆட்சியின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அவர்களும், ஏன், ஒன்றிய அமைச்சர்களும், “சாதனை” என்று பக்கத்திற்குப் பக்கம் – தொலைக்காட்சிக்குத் தொலைக்காட்சி விளம்பரம், பேட்டிகள் வாயிலாகப் பெருமைப்படுத்திக் கொண்ட ஜி-20 மாநாட்டு நிகழ்ச்சியில்தான்!

CM Stalin meets PM Modi, US President Biden at G20 dinner

 

சகோதரி தமிழிசை அவர்களுக்கு ஆளுநர் என்ற முறையில் தன்னை அழைக்காமல் பிரதமர் விட்டுவிட்டாரே என கோபமா? அல்லது ஜி-20 மாநாட்டிற்கு இப்படியொரு விளம்பரத்தைச் செய்தது வருத்தமா? பாரதியாரையும் வம்புக்கு இழுத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களையும் வசைபாடியிருக்கிறார்.

பாரதியாருக்குப் பெருமை சேர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவர் வழியில் நின்று, பாரதியாரைப் பெருமைப்படுத்தும் பல்வேறு பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், எங்கள் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்து வருகிறார்.

பாரதியின் நினைநாள், “மகாகவி நாள்”; பாரதி இளங்கவிஞர் விருது வழங்கப்படும் என்று அறிவிப்பு; வாரணாசியில் அவர் வாழ்ந்த வீடு 18 லட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு; அதில் மகாகவி பாரதியாரின் மார்பளவு சிலை வைப்பு; சிறு நூலகம், வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள்; வரலாற்றுப் படைப்புகள் வைப்பு” என எல்லாவற்றையும் நிறைவேற்றி, மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பாகக் கொண்டாடி, அதற்குச் சிறப்பு நூற்றாண்டு மலர் வெளியிட்டதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்தான் என்பதை சகோதரி தமிழிசை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

rs bharathi

ஆனால் இவை எதுவுமே தெரியாதது போல், ஒருவேளை அண்டை மாநில ஆளுநராகச் சென்று விட்டதால், தமிழ்நாட்டு அரசியல் விவரங்களுடன் தொடர்பு விட்டுப் போனவர் போல் சகோதரி பேசியிருப்பது வேதனைக்குரியது.

அவர் குறிப்பிட்ட பாரதியாரின் நினைவு நாளன்று, தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களும் மரியாதை செலுத்தியிருக்கிறார்கள். அவரது பிறந்தநாளன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே மரியாதை செலுத்தி, நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஆகவே தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கும் சகோதரி, தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக, தன் அரசியல் நிலைப்பாட்டைத் தமிழ்நாட்டில் தக்க வைத்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆசையை டெல்லி மேலிடத்திற்கு வெளிப்படுத்தும் விதமாக, தவறான பேட்டிகளைக் கொடுத்து, பாரதியாரின் பெருமையை மட்டுமல்ல அனைத்துக் கவிஞர்களின் புகழையும் பரப்பி வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

tamilisai soundararajan

தெலங்கானாவிலிருந்து தமிழ்நாடு வந்தவுடன், குறைந்தபட்சம் கடந்தகால பத்திரிக்கைச் செய்திகளைப் படித்து விட்டு தி.மு.க. அரசைக் குறைகூறுங்கள். அப்படியும் படிக்க இயலவில்லை என்றால், ஒரு மாநிலத்திற்கு இரு மாநிலம் என்ற நிலையில், ஆளுநர் பொறுப்பை வகிக்கும் சகோதரி தன் அதிகாரிகளிடமாவது, ”அவ்வப்போது தமிழ்நாடு அரசியல் நிலவரங்களைச் சொல்லுங்கள்” என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, தி.மு.க. மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ