ஏற்காடு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 30- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணியளவில் சேலம் ஏற்காடு செல்லும் மலைப்பகுதியில் பயணிகளுடன் சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; படுகாயமடைந்த 65 பேர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “ஏற்காடு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் தர வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு வரும் வாகனங்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும். ஏற்காடு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.
தமிழக அரசு பழுதடைந்த பழைய பேருந்துகளை அகற்றி புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்” என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.