Homeசெய்திகள்அரசியல்"200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு".... திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

“200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு”…. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

-

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, நடந்த முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரை தொடர்ச்சியாக மக்கள் மன்றத்தில் வென்றிருக்கிறோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக ஆட்சிதான் என்பதில் சந்தேகமில்லை என்றும் தெரிவித்தார்.
200 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு நலத்திட்டப் பணிகளை செய்திருக்கிறோம் என்றும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு தேர்தலை மனதில் வைத்தே செயல்பட வேண்டும் என திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் அதேவேளையில் நம்முடைய சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும் என்றும், நாட்டின் எந்த ஒரு வீட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த வீட்டில் ஒருவராவது பயனடையும் வகையில்தான் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார். மக்களை சென்று சேர்ந்திருக்கும் நலத்திட்டங்கள் எல்லாம் வாக்குகளாக மாற வேண்டும் – நம்முடைய களப்பணி மிக மிக அவசியம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம்! என்றும், அந்த வரலாற்றை எழுதியது நாம்தான்! என்றும் கூறினார். மேலும் கட்சி தொடங்கி 75 ஆண்டுகள் ஆனபிறகும் ஆட்சியில் இருக்கும் இயக்கமும் நம்முடையதுதான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

75 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த இயக்கத்தின் தேவை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருப்பதாகவும், திமுகவின் வளர்ச்சிக்கு, கோடிக்கணக்கானவர்களின் உழைப்பும் – தியாகமும் உரமாக்கப்பட்டிருப்பதாகவும், இதுவே இந்த இயக்கம் ஆலமரமாக வேரூன்றி நிற்பதற்கு காரணம் என்றும் கூறினார். மேலும், இந்த இயக்கத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையும் நம்முடைய கைகளில் இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்

MUST READ