spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தூய்மை பணியாளர்களின் துயரநிலை: திராவிட மாடல் என்பதெல்லாம் ஏட்டளவில்... திருமுருகன் காந்தி வேதனை

தூய்மை பணியாளர்களின் துயரநிலை: திராவிட மாடல் என்பதெல்லாம் ஏட்டளவில்… திருமுருகன் காந்தி வேதனை

-

- Advertisement -

சகமனிதர்களிடம் அக்கறை கொள்ளத சமூகத்தால் நேர்மையான ஆட்சியாளர்களை உருவாக்கிவிட முடியாது என தூய்மை பணியாளர்களின் துயரங்களை விவரித்துள்ளார் திருமுருகன் காந்தி.

மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி தனது முக நூல் பக்கத்தில், ‘‘நேற்றிரவு 12 மணியளவில் தூய்மைப்பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்தேன். அவர்களிடம் பேசினேன். நேற்றிரவு மட்டுமல்ல, இன்றும் நாளையும் வேலைக்கு வரவேண்டியுள்ளது என்றார்கள். மேலும் விடுமுறை என்பதே கொடுப்பதில்லை என்றார் அப்பெண் பணியாளர். இவர்கள் பயன்படுத்தும் துடப்பகட்டைகளைக் கூட இவர்களே காசுகொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் நிலை. சென்னை மாநகராட்சியிடம் ஒப்பந்தம் போட்டிருக்கும் வெளிநாட்டு பெருநிறுவனங்கள் துடப்பக்கட்டைகளை கூட வாங்கிகொடுக்கும் நிலையில்லாத வரிய நிறுவனங்களா என கேட்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். சென்னையில் இவர்களுக்கு அதிகபட்சம் 12,000 சம்பளமும், ஊரகங்களில் 5000-6000 வரை எனுமளவிலும், இன்னும் சில இடங்களில் 3000 எனுமளவில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.Cleaning person

we-r-hiring

இவர்களுக்கு விடுமுறை கிடையாது. விடுப்பு எடுத்தால் சம்பளப்பிடித்தம் செய்யப்படும், ஆனால் விடுமுறை நாள் குப்பைகளையும் சேர்த்து தூய்மை செய்ய வேண்டும். இவர்களில் மாதம் ரூ1500 எனும் சம்பளத்திற்கு 18 ஆண்டுகளாக ஆரம்பசுகாதார தூய்மைப்பணியாளராக பிரசவ வார்டுகளில் வேலைபார்த்த 2000 தூய்மைப்பணியாளர்களும் அடக்கம். கடுமையான போராட்டத்திற்கு பின் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள் சம்பளம் 1500லிருந்து 10,000 அளவில் உயர்த்தப் பட்டிருக்கிறது.

2015 வெள்ளத்தின் போது, சென்னையில் குவிந்த குப்பைகளை அகற்ற, கொங்கு மண்டலத்திலிருந்து குப்பை லாரிகளில் நிற்க வைத்தவாறே தூய்மைப்பணியாளர்களை கொண்டுவந்தது அன்றய அதிமுக அரசு. குளிரில் நின்றவாறே அவர்கள்.இரவு முழுவதும் பயணித்ததாக சொன்னார்கள். இதுபோல சென்னையில் பேரிடர் வரும்போதெல்லாம் பல ஊர்களிலிருந்து கொண்டு வரப்படுகிறார்கள். இதேபோல கஜா புயலின் போது டெல்டாவில் சேதமடைந்த ஒட்டுமொத்த மின் கட்டமைப்புகளை சில நாட்களுக்குள்ளாக இரவு-பகலாக உழைத்த ஒப்பந்த ஊழியர்கள் விரைந்து சீரமைத்தனர். கொரொனோ பேரிடரில் ஒப்பந்த செவிலியர்கள் உயிர் அச்சம் கொள்ளாது பணி செய்தார்கள்.

இன்றும் நாளையும் சென்னையை புரட்டிபோடும் புயலின் சீரழிவிலிருந்து இந்த தூய்மைப்பணியாளர்களும், மின் ஒப்பந்த ஊழியர்களும் இதர ஒப்பந்த ஊழியர்களும் நம்மை மீட்பார்கள். அடுத்த சில நாட்களில் சென்னை சீரமையும், நாம் அன்றாட வேலைகளை தொடங்கி அதில் மூழ்கிப் போவோம். இந்த ஊழியர்கள் சிறப்பு ஊதியம், பணி நிரந்தரம், பணிக்கால பாதுகாப்பு என எதுவுமில்லாமல் உழைப்பை தொடர்வார்கள். 2021 ஜனவரி மாதத்தில் எடப்பாடியார் அரசு 10,000 தூய்மைப்பணியாளர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இவர்களுக்கும், மற்ற பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வும், பணி நிரந்தர உத்திரவும் செய்வதாக 2021 தேர்தலில் வாக்கு கொடுத்த திமுக எவற்றையும் நிறைவு செய்யாமல் ஒரு சில மாதங்களில் அடுத்த மாநில தேர்தலுக்கு தயாராகிவிடும். எதிர்க்கட்சி எந்த எதிர்ப்பும் செய்யாமல் வாக்குறுதி பட்டியலில் இக்கோரிக்கைகளை சேர்த்திருப்பார்கள்.

இந்த தூய்மைப்பணியாளர்கள், மின் ஊழியர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் என ஒப்பந்தம் அடிப்படையில் சுரண்டப்படும் பட்டியலின்-மிகப்பிற்படுத்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் விடிவிற்கு பொதுச்சமூகம் குரல் எழுப்பாமல் எதுவும் மாறப்போவதில்லை. ஆனால் நாம் இவர்களை பற்றிய கவனமும், பொறுப்பும் சிறிதுமின்றி அன்றாட வாழ்வை கடத்திக் கொண்டிருக்கிறோம். இவர்களுக்காக போராட நாமும் வீதிக்கு வந்தாக வேண்டும். சகமனிதர்களிடம் அக்கறை கொள்ளத சமூகத்தால் நேர்மையான ஆட்சியாளர்களை உருவாக்கிவிட முடியாது.

இதுபோன்ற அவல நிலைக்கு அதிமுக-திமுக கொள்கை நிலைப்பாடு எடுக்காததும், அதிகாரிகளின் சுரண்டல் சாதிய அணுகுமுறையும் காரணம். இந்த சாமானிய தொழிலாளர்களுக்கு தீர்வு கிடைக்காமல் ‘சமூகநீதி அரசு, திராவிட மாடல்’ என்பதெல்லாம் ஏட்டளவில் மட்டுமே இருக்கும்’’என்று அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ