நம்பிக் கைவிட்ட தம்பி விஜய்க்கு, ரஜினியுடனான சந்திப்பு மூலம் ‘ஷாக்’கொடுத்து இருக்கிறார் சீமான். இந்த சந்திப்பால் உற்சாகமடைந்துள்ள ரஜினி ரசிகர்கள், ‘கழுகு – புலி’படத்தைப் போட்டு சமுக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். சீமானை சந்தித்திருப்பதன் மூலம், விஜய்க்கு தனது ஆதரவு இல்லை என்று ரஜினி தங்களுக்கு சிக்னல் கொடுத்திருப்பதாகவே அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.
ஆனாலும் மீசையில் மண் ஒட்டாததைப்போல ரஜினி சந்திப்பு பத்தோடு ஒன்று என கூறி வருகிறார்கள் சீமானின் தம்பிமார்கள். கடந்த 15 ஆண்டுகளில் எத்தனையோ அவதூறுகளையும், அவமானங்களையும் சந்தித்து பல கட்சிகள் கூட்டணிக்காக பல கோடி ரூபாய் பேரம் பேசியும் எதற்கும் செவி சாய்க்காது தமிழ்தேசிய அரசியலில் தனித்து நின்று இன்றுவரை களமாடும் அண்ணன் சீமானுக்கு யாரும் அறிவுரை சொல்ல தேவையில்லை. தனித்துவமானவர் சீமான்’’என்று தொடை தட்டுகிறார்கள் தம்பிகள்.
ரஜினி – சீமான் சந்திப்பு குறித்து நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி தளது எக்ஸ் தளப்பதிவில், ‘‘வேட்டையன்’ படத்துக்கு வாழ்த்தறிக்கை வழங்கினார் அண்ணன் சீமான். பதிலுக்கு அண்ணன் சீமான் அவர்களுக்கு அலைபேசியில் நன்றி கூறினார் ஐயா ரஜினிகாந்த்.
பிறகு, அண்ணன் சீமான் அவர்களைச் சந்திக்க விருப்பப்பட்டார் ரஜினிகாந்த். அண்ணன் சீமான் அவர்களின் தொடர் நிகழ்வுகள், சுற்றுப்பயணங்கள், ரஜினிகாந்தின் படப்பிடிப்பு என இருவருக்கும் நேர நெருக்கடி இருக்கவே, 10 நாட்களுக்கு முன்பே நடக்க வேண்டிய சந்திப்பு தள்ளிப்போனது. நவம்பர் 8 அன்றே நடக்க வேண்டிய சந்திப்பு இது. அன்று அண்ணன் பிறந்த நாள் என்பதால், நேரமின்மை காரணமாக நடக்கவில்லை.
அந்தச் சந்திப்புதான் தற்போது நிகழ்ந்திருக்கிறது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. 2.30 மணி நேரம் நிகழ்ந்த இச்சந்திப்பில், நாட்டு நடப்புகள், திரைத்துறை, சமூக அவலங்கள், அரசியல் சூழல்கள் என யாவும் பேசப்பட்டிருக்கின்றன. இச்சந்திப்பில் அரசியலும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், சந்திப்புக்கு அரசியல் நோக்கம் ஏதுமில்லை. மொத்தத்தில், எவ்வித இலாப நட்டக்கணக்கும், அரசியல் ஆதாய நோக்கமுமற்ற மிக இயல்பான சந்திப்பு!
இச்சந்திப்புக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடுகளிலும், கோட்பாடுகளிலும் மாற்றம் இருக்கப் போவதுமில்லை. ஐயா ரஜினிகாந்த் மீண்டும் அரசியல் பக்கம் திரும்பப் போவதுமில்லை. அண்ணன் சீமான் தனது அரசியல் பணிகளை வழக்கம்போல தொடர்கிறார். ஐயா ரஜினிகாந்த் தனது அலுவல்களைப் பார்க்கிறார். அவ்வளவே’’ எனத் தெரிவித்துள்ளார்.
சந்தடி சாக்கில் விஜயையும் சீண்டி வருகிறார்கள் தம்பிமார்கள். ‘‘அண்ணன் சீமான் புகைப்படத்தை மார்பிங் செய்து கேளிக்கை செய்யும் விஜய் ரசிகர்களுக்கு இறுதி எச்சரிக்கை.! ஆளும் கட்சி திமுகவையே எதிர்த்து அரசியல் செய்பவர்கள் நாங்கள். உங்களை போல விஜய் மூஞ்சை மார்பிங் செய்து பதிவிட எங்களுக்கு ரொம்ப நேரம் எல்லாம் ஆகாது என்பதை மனதில் கொள்ளவும்’’ என்று ஃபயர் விட்டு வருகிறார்கள் நதக தம்பிமார்கள்.
ஆனால் விஜய் ரசிகர்களோ, ‘‘ரஜினி அவர்களை சீமான் அவர்கள் பேசாத பேச்சே இல்லை. இப்ப மானங்கெட்டு ரஜினி இடம் மண்டியிடுகிறார் சீமான். இதை புரிந்து கொள்ளாத ரஜினி ரசிகர்கள் சீமான் வாழ்க எனும் கோஷம் இடுகிறார்கள்’’ என அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.
‘‘தலைமைப் பண்பற்ற ஆகச் சிறந்த கருத்தியலாளன். கருத்தியல் விதைக்கப்பட்டு விட்டது. திராவிட ஈவேரா எப்படியோ அப்படி தமிழ் தேசிய சீமான். அடுத்தகட்டம் பற்றி தம்பிகள் யோசிப்பது நல்லது. வாக்கரசியலில் இந்த முறை கடும் வீழ்ச்சியிருக்கும்’’ எனவும் விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.