Homeசெய்திகள்அரசியல்தவெக மாநாட்டில் கலந்துக்கொள்ள போகும் அரசியல் பிரமுகர்கள், முன்னணி நடிகர்கள் யார்? ரகசியம் காக்கும் விஜய்;...

தவெக மாநாட்டில் கலந்துக்கொள்ள போகும் அரசியல் பிரமுகர்கள், முன்னணி நடிகர்கள் யார்? ரகசியம் காக்கும் விஜய்; டென்ஷனில் கட்சிகள்

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் கலந்துகொள்ள போகும் அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் யார் யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் தவெக தலைவர் விஜய் அனைத்து மூவ்மெண்ட் களையும் ரகசியமாகவே வைத்து எல்லோரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார்.


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக மாநாடு நடைபெறும் இடத்தில் 127 ஏக்கர் நிலமும் , சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அதேபோல திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கு என பார்க்கிங் வசதிக்காக தலா 40 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதன் 90% பணிகள் நிறைவடைந்துள்ளதாக த.வெ.க தரப்பினர் தகவல் தெரிவித்தனர்.

மேலும் தவெக கட்சியில் பிரபலமான அரசியல் பிரமுகர்களோ, மக்களை கவரக்கூடிய அளவிற்கு பேச்சாளர்களோ, தேர்தலில் வியூகம் அமைக்கும் அளவிற்கு அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்களோ இல்லை. இந்த நிலையில் அதிமுக, திமுக போன்ற முக்கிய கட்சிகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் பிரமுகர்களிடம் விஜய் பேசி வருவதாக தகவல் வெளியானது. மேலும் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக தொடங்கியபோது வெளியேறிய தலைவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் தவெக தலைவர் விஜய், அவர்களை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. செஞ்சி ராமச்சந்திரன், மதுரை பொன் முத்துராமலிங்கம், நாஞ்சில் சம்பத், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் போன்ற அரசியல் அனுபவசாலிகள் உடன் விஜய் பேசியதாகவும் கூறப்படுகிறது. அதேபோன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக, திமுக மீது அதிர்ப்தி அடைந்துள்ள பிரமுகர்களிடம் விஜய் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா துறையில் இருந்து தாடி பாலாஜி, நடிகர் விஷால் போன்ற நடிகர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று அவர்களே அறிவித்துள்ளனர். மேலும் அரசியலில் ஆர்வம் உள்ள முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் விஜய் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தற்போது வரை மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்களின் விவரங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல் ரகசியமாகவே வைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மாநாட்டில் விஜயின் பேச்சு மற்றும் கட்சியின் கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரிக்க செய்துள்ளது.

மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் முன்னிலையில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை மேடையேற்ற தமிழக வெற்றிக் கழகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் கலைஞர்களை எந்த இடையூறும் இன்றி கவனித்துக் கொள்ளவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் ஜார்ஜ் கோட்டை மற்றும் தமிழ் பாரம்பரிய கட்டிடங்கள், இடங்களை பேசும் வகையில் செட் அமைக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மாநாடு 27ம் தேதி பகல் 2 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ