ஒரு தேர்தலில் ஆலோசனை ஒரு கட்சிக்கு ஆலோசனை வழங்க ரூ.100 கோடி கட்டணமாகப் பெறுவதாக தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஜான் சுராஜ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறுகையில், தேர்தல் வியூகவாதியாக எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது தலைவருக்கு ஆலோசனை வழங்க 100 கோடி ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிப்பதாக பீகாரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.
பெலகஞ்சில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘எனது பிரச்சாரங்களுக்கு எவ்வாறு நிதி வருகிறது என்று மக்கள் அடிக்கடி கேட்கிறார்கள். வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பத்து அரசாங்கங்கள் எனது உத்திகளால் வெற்றி பெற்று இயங்குகின்றன. என்னுடைய பிரச்சாரத்திற்கு கூடாரங்கள் மற்றும் நிழற்குடைகள் அமைக்க என்னிடம் போதிய பணம் இருக்காது என்று நினைக்கிறீர்களா? நான் பலவீனமானவன் என்று நினைக்கிறீர்களா? பீகாரில், என்னுடைய கட்டணத்தைப் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை. ஒரு தேர்தலில் நான் ஒருவருக்கு அறிவுரை கூறினால், எனது கட்டணம் ரூ. 100 கோடி அல்லது அதற்கும் அதிகமாகும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, இதுபோன்ற ஒரே ஒரு தேர்தல் ஆலோசனையாளராக பணியாற்றினால் போதும். எனது பிரச்சாரத்திற்கு தொடர்ந்து நிதியளிக்க முடியும்’’ என அவர் தெரிவித்தார்.
ஜான் சுராஜ் பீகாரில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். பெலகஞ்ச் தொகுதியில் முகமது அம்ஜத், இமாம்கஞ்ச் தொகுதியில் ஜிதேந்திர பாஸ்வான், ராம்கர் தொகுதியில் சுஷில் குமார் சிங் குஷ்வாஹா, தராரி தொகுதியில் கிரண் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தல் நவம்பர் 13 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது, நவம்பர் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகத்தில் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்தவர் இந்த பிரஷாந்த் கிஷோர்.