பென்னாகரத்தில் தனித்தமிழில் பெயர்ப்பலகைகள் வைத்திருப்பதால் மகிழ்ச்சியளிக்கும் மனமாற்றம் என்று குறிப்பிடுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
அவர் மேலும் இதுகுறித்து, தமிழ்நாட்டில் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக தமிழைத்தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை மேற்கொண்ட நான், அதன் தொடர்ச்சியாக தமிழைக் காப்பதற்காக அரசுக்கும், வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறேன். அவற்றின் முதன்மையானது தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின்படி தமிழை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகைகளை அமைக்க வேண்டும் என்பதாகும். இதை வலியுறுத்தி சென்னையில் வணிகர்களை சந்தித்து நானே துண்டறிக்கைகளை வழங்கினேன். இதற்கு வணிகர்களிடம் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது என்று மகிழ்கிறார்.
மேலும் இதுகுறித்து அவர், தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள பல்வேறு கடைகளின் உரிமையாளர்கள் நேற்று தங்களின் கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழை முதன்மைப்படுத்தி மாற்றி அமைத்துள்ளனர். அவற்றை பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான கோ.க.மணி திறந்து வைத்தார்.
தமிழில் பெயர்ப்பலகைகளை அமைத்த வணிகர்களை பாராட்டி சிறப்பித்ததுடன், மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான வெங்கடேசுவரன், பா.ம.க. பொறுப்பாளர்கள் பாடி செல்வம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
பென்னாகரம் வணிகர்களிடம் வெளிப்பட்ட உணர்வும், மகிழ்ச்சியளிக்கும் மனமாற்றமும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வணிகர்களிடமிருந்தும் வெளிப்பட வேண்டும். தனித்தமிழில் பெயர்ப்பலகைகளை அமைக்கும் வணிகர்களை சந்திக்கவும், மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தவும் நான் காத்திருக்கிறேன் என்கிறார்.