சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430 பேர்
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை கூடுதலாக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது.
இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இறுதி கட்டமாக 7-வது கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், 39 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த 39 மையங்களிலும் உள்ள 43 கட்டிடங்களில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக 234 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பொதுவாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும்.
இதன்படி, அனைத்து மையங்களிலும் சேர்த்து வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளன. இதில், சில மையங்களில் 30-க்கும் மேற்பட்ட மேஜைகள் போடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி தனித்தனியாக வீடியோவில் பதிவு செய்யப்படும். இதுதவிர, சுற்றியுள்ள நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும்.
வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் அலுவலர்கள், அவர்களுக்கு உதவியாக மின்னணு இயந்திரங்கள் எடுத்து வருதல் உள்ளிட்ட பணிகளுக்காக 24 ஆயிரம் பேர், நுண்பார்வையாளர்கள் 4,500 பேர் என மொத்தம் 38,500-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை கூடுதலாக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி 39 தொகுதிகளுக்கு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 அரசு அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை நாளன்று தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உதவியாக இருந்து வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்வதால் இவர்களின் முதன்மையான பணி என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.