Homeசெய்திகள்தமிழ்நாடுமின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு

மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு

-

- Advertisement -

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் இந்த ஆண்டிற்குள் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும், மின்வாரியத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய புதிய டெண்டர் கொள்கை அமல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், 300 உதவிப் பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டதை முன்னிட்டு மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்வாரிய வரலாற்றில் முதல்முறையாக வெளிப்படையான முறையில் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

we-r-hiring

15 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வுக்காக காத்திருந்த உதவிப் பொறியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய அவர், மற்ற பிரிவுகளிலும் நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் விரைவில் வழங்கப்படும் என்றார். மின்வாரியத்தில் தற்போது சுமார் 70 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், முதற்கட்டமாக 15 ஆயிரம் புதிய பணியாளர்களை அரசுப் பணியில் நியமிப்பதற்கான முன்மொழிவு தயாராகி வருவதாக தெரிவித்தார். முதலமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த ஆண்டிலேயே நிரந்தர அரசுப் பணியிடங்களாக அவை நிரப்பப்படும் என்றும் கூறினார். கேங்மேன் பணியிடங்கள் தொடர்பாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.

மின்வாரியத்தில் டெண்டர் மதிப்பீடுகளில் கடந்த காலங்களில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய அமைச்சர், அவற்றைத் தடுக்க புதிய டெண்டர் கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதாக கூறினார். சந்தை விலை மற்றும் உற்பத்தியாளர்களின் நேரடி விலையை அடிப்படையாகக் கொண்டு மூன்று தனித்துவமான குழுக்கள் மூலம் மட்டுமே இனி டெண்டர் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என்றார். இதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் கோடி முதல் ரூ.30 ஆயிரம் கோடி வரை அரசுக்கு சேமிப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

முறைகேடு கண்டறியப்பட்ட பழைய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு, அவை சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சார அனுமதிகளில் இடைத்தரகர்களின் தலையீட்டை முற்றிலும் ஒழிக்க புதிய இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இதன் மூலம் நுகர்வோர்கள் நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது மின்சாரத் தட்டுப்பாடு இல்லை என்றும், உபரி மின்சாரத்தை மத்திய மின்தொகுப்பிற்கு விற்பனை செய்து மின்வாரியம் வருவாய் ஈட்டி வருவதாகவும் அமைச்சர் கூறினார். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின்வெட்டு பிரச்சினைகளுக்கு பழமையான டிரான்ஸ்ஃபார்மர்கள் மற்றும் கேபிள்கள் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், அவற்றை சரிசெய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சில பகுதிகளில் திட்டமிட்டு மின்சார பெட்டிகளில் உள்ள பியூஸ்களை அகற்றி மின்வெட்டு ஏற்படுத்தும் நாசவேலைகள் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டம் இளம்பெண் விவகாரம் – சுதந்திரமான விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்

MUST READ