தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்ணை அழைத்துச் சென்ற சிலர், அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், பின்னர் இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் பாதிக்கப்பட்ட பெண்ணால் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் அரசியல் பின்னணி அல்லது செல்வாக்கை கருத்தில் கொள்ளாமல், முழுமையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் முன்வைத்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் விசாரணையின் கீழ் கொண்டு வரப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான பாதுகாப்பு, உரிய நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்குவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
