Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பரங்குன்றம் விவகாரம் - சட்டத்துறை அமைச்சரின் அறிவிப்பை அரசின் நிலைபாடாக அறிவிக்க வேண்டும் – சிந்தனை...

திருப்பரங்குன்றம் விவகாரம் – சட்டத்துறை அமைச்சரின் அறிவிப்பை அரசின் நிலைபாடாக அறிவிக்க வேண்டும் – சிந்தனை செல்வன்

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சரின் கருத்தை தமிழக அரசின் நிலைப்பாடாக  உறுதிபடுத்திட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் வலியுறுத்தியுள்ளாா்.திருப்பரங்குன்றம் விவகாரம் - சட்டத்துறை அமைச்சரின் அறிவிப்பை அரசின் நிலைபாடாக அறிவிக்க வேண்டும் – சிந்தனை செல்வன்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மத அடிப்படைவாத சங்பரிவார் கும்பலின் இலக்காக மாறியிருக்கும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பதற்றத்தைத் தணிக்கும் வகையிலே மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் அவர்கள் “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலையே தொடரும்” என அறிவித்திருப்பது ஆறுதலை அளிக்கிறது. ஆயினும், இது தொடர்பாக இரண்டு வழக்குகளில் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் இன்றுவரை தமிழக அரசால் மேல்முறையீடு செய்யப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் பழைய நிலை தொடர்வது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.

we-r-hiring

மேல்முறையீடு செய்யப்பட வேண்டிய முதல் தீர்ப்பு வழக்கு எண் Writ Appeal 3188/2025 ல் தரப்பட்ட தீர்ப்பு ஆகும். இவ்வாண்டின் தொடக்கத்தில் 2026 ஜனவரி 6ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில், சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற  நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்பு சிறு திருத்தங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புக்கெதிராக இதுவரை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.

இரண்டாவது சிக்கந்தர் தர்காவில் காலங்காலமாக பின்பற்றப்பட்ட ஆடு கோழி பலியிடுதலை எதிர்த்த வழக்கு. Writ Petition 2277/2025. இவ்வழக்கில் கடந்த 10/10/2025 அன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்பில் பலியிடுதலுக்கான தடை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்தும் இதுவரை அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. மேற்சொன்ன இந்த இரண்டு தீர்ப்புகளுக்கும் எதிராகத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையாக மேல்முறையீடு செய்யவில்லையானால், இந்த இரண்டு தீர்ப்புகளையும் நடைமுறைப்படுத்த வேண்டிய நெருக்கடி தமிழக அரசிற்கு உருவாகும்.

ஆகவே, திருப்பரங்குன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என்பது அரசின் உறுதியான நிலைப்பாடாக இருக்குமானால் காலந்தாழ்த்தாது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு உடனடியாக உரிய சட்டம் சார்ந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.

மாரிதாஸ் கைது விவகாரம் – தவெக அரசை கடுமையாக விமர்சித்த சீமான்

MUST READ