யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கைது நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்து கருத்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் அவதூறான கருத்துகளை பரப்பியதாக கூறி, மாரிதாஸை சைபர் கிரைம் போலீசார் மதுரையில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பல்வேறு எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்த சீமான், மாரிதாஸ் மீதான கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கலின் வெளிப்பாடு என குற்றம்சாட்டினார். அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை அச்சுறுத்தும் நோக்கில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாரிதாஸ் தொடர்ந்து அரசின் நிர்வாக குறைபாடுகளை வெளிக்கொண்டு வந்ததாகக் குறிப்பிட்ட சீமான், அவரது கருத்துகள் அவதூறானவை என்று கருதப்பட்டிருந்தால் சட்டப்படி வழக்கு தொடரலாம் என்றும், நேரடியாக கைது செய்வது ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது என்றும் வாதிட்டார். மேலும், சமூகத்தில் நடைபெறும் கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் விற்பனை போன்ற கடுமையான குற்றங்களுக்கு எதிராக காட்டப்படாத அவசர நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்களிடம் மட்டும் காட்டப்படுவது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

ஆளும் கட்சியினரால் சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சியினரும் விமர்சகர்களும் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், அத்தகைய சம்பவங்களில் சட்டம் ஒரே அளவுகோலைப் பின்பற்றுவதில்லை என்றும் சீமான் குற்றம்சாட்டினார். அரசை விமர்சிப்பவர்கள்மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவது அரசியல் நோக்கத்துடன் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் முன்பு விமர்சனங்களை வரவேற்பதாகக் கூறியிருந்த நிலையில், தற்போது விமர்சனங்களுக்கு கைது நடவடிக்கை எடுக்கப்படுவது முரண்பாடாக இருப்பதாகவும் சீமான் சுட்டிக்காட்டினார். கருத்துரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அரசு, விமர்சனக் குரல்களை ஒடுக்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
இறுதியாக, பழிவாங்கும் அரசியல் அணுகுமுறையை தவெக அரசு கைவிட்டு ஜனநாயக முறையில் செயல்பட வேண்டும் என்றும், மாரிதாஸை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார். மாரிதாஸ் கைது விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், கருத்துச் சுதந்திரம், விமர்சன உரிமை மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசியல் அரங்கில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
யூடியூபர் மாரிதாஸ் கைது – தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம்
