கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சொகுசு காரும், பிக்கப் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் பெங்களுரை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
பெங்களூர் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சீனு, தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலையில் நடைபெற்ற உறவினரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். பின்னர் அனைவரும் சொகுசு காரில் பெங்களூருக்கு திரும்பி கொண்டிருந்தார். காரை சீனு ஒட்டிச்சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை ஏரிக்கரை அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக எதிரேவந்த பிக்கப் வேனும், சொகுசு காரும் நேருக்கு நேர் மோதிவிபத்திற்குள்ளானது. இதில் சீனு, அவரது தாயார் பாப்பாத்தி அம்மாள் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சிங்காரப்பேட்டை போலீசார், விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.