நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா அருகே நேற்று இரவு 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மெட்டாலா கோரையாற்று பாலத்தில் சென்றபோது தனியார் பேருந்தின் மீது, எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் மற்றும் ஒரு பெண் பயணி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் சென்ற 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராசிபுரம் காவல்துறையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர். விபத்து குறித்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.