சேலம் அருகே மல்லூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் அருகே பனமரத்துப்பட்டி அடுத்துள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சென்னன். இவர் தனது மகள் சுதா (38), பேரன் விஷ்ணு(12) ஆகியோருடன் சமயபுரம் கோவிலுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் மல்லூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். மல்லூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னன் வாகனத்தின் மீது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சென்னன், அவரது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் மல்லூர் போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநர் சுந்தரராஜனை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.