கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை NH சாலை மரக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மனைவி ராபியத்துல் பஷிரியா. நேற்று மாலை தம்பதியினர் இருவரும் கோவை பாலக்காடு சாலை சுண்ணாம்புகாளவாய் வழியாக குனியமுத்தூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மதுக்கரை நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து, இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த ராபியத்துல் பஷிரியாவின் மீது தலை மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் கணவர் முகமது ரபீக் கண்முன்னே மனைவி பஷிரியா தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த காயம் அடைந்த முகமது ரபீக், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். விபத்து தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த கந்தேகவுண்டன் சாவடி பகுதியை சேர்ந்த தனியார் பேருந்தின் ஓட்டுனர் ஜெயக்குமார் மீது வெரைட்டிஹால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கோர விபத்தின் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதரவைக்கின்றது.


