அருந்ததியர் மக்களை மிகக் கேவலமாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துலக அருந்ததியர் மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் பி.முனுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.


அனைத்துலக அருந்ததியர் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அதன் நிறுவனத் தலைவர் பி.முனுசாமி தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, பிப்ரவரி 26-ஆம் தேதி மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய நாளை அருந்ததியர்கள் சுதந்திர தினமாக கொண்டாடி வருவதாக கூறினார்.
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர், அருந்ததியர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது போல இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் அருந்ததியர்களுக்கு அரசியலில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் அருந்ததியர் மக்களை மிக கேவலமாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முனுசாமி வலியுறுத்தினார்.
ஈரோடு இடைத்தேர்தலில் அனைத்துலக அருந்ததியர் மக்கள் இயக்கம் வைத்த கோரிக்கையை ஏற்று தேர்தல் அதிகாரிகள் சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
![]()
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் அமைத்தது போல, சுதந்திரப் போராட்ட வீர மங்கை குயிலிக்கும் மணிமண்டபம் அமைத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று அனைத்துலக அருந்ததியர் மக்கள் இயக்கத்தினர் கேட்டுக் கொண்டனர்…


