Homeசெய்திகள்தமிழ்நாடுநவாஸ்கனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்

நவாஸ்கனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்

-

- Advertisement -

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தொடர்பாக வருமானத்தை மறைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றம் முன்பு தெரிவித்துள்ளது.நவாஸ்கனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்

நவாஸ்கனி 2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் வருமான விவரங்களில் முரண்பாடு இருப்பதாகக் கூறி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி வெங்கடாஜலபதி மனுத் தாக்கல் செய்திருந்தார். வருமானத்தை மறைத்துள்ளதால் விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

we-r-hiring

இந்த மனு தலைமை நீதிபதி எம். எம். ஶ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தனியாக வழக்கு தொடர தேவையில்லை; துறையின் வசம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நவாஸ்கனி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். மேலும், இந்த வழக்கு நிலுவையில் இருப்பது, வருமான வரித்துறையின் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் ஆகாது எனவும் தெளிவுபடுத்தினர்.

இதற்கிடையில், வேட்புமனுவில் அறிவிக்கப்பட்ட சொத்து விவரங்களின் அடிப்படையில் வருமானத்தை விட அதிகமாக ரூ.23.58 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாகக் கூறி, மத்திய புலனாய்வு நிறுவனம் (CBI) வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவும் விசாரணைக்கு வந்தது.

அதில், சிபிஐ தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட விளக்கத்தில், 2024ஆம் ஆண்டு வேட்புமனுவில் காணப்படும் சொத்து உயர்வு, பழைய சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கியதன் விளைவாக ஏற்பட்டது என்று கூறப்பட்டது. மனுதாரர் குறிப்பிட்ட அளவுக்கு சொத்து அதிகரிப்பு இல்லை; மொத்தமாக 2.85 சதவீதம் மட்டுமே உயர்வு உள்ளது. எனவே, புகாரில் முகாந்திரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவையும் தலைமை நீதிபதி அமர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை குறித்த தீர்மானம் பின்னர் எடுக்கப்படும்.

சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி… 5 பேர் கொண்ட கும்பல் கைது…

MUST READ