அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு
கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கியதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனிடையே கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவிடப்பட்டது. தீர்மானங்கள் குறித்து சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உத்தரவிட்டு பொதுச்செயலாளார் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ்-ன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை அங்கீகரித்தும், அவற்றை எதிர்த்த வழக்குகளை வழக்குகளை தள்ளுபடி செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷாபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனிடையே ஓபிஎஸ் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போது வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு இறுதியானது அல்ல, பின்னடைவும் அல்ல. எங்களது சட்டப்போராட்டம் தொடரும்” என்றார்.