Homeசெய்திகள்தமிழ்நாடுஇஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் இதயங்கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்கள் - அன்புமணி!

இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் இதயங்கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்கள் – அன்புமணி!

-

இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் இதயங்கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான இரமலான் மாதத்தில் தான் இறை தூதர் நபிகள் நாயகத்திற்கு குரான் வெளிப்படுத்தப்பட்டது என்பதால், அதைக் குறிக்கும் வகையில் தான் இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் பகல் நேரத்தில் நோன்பிருந்து நபிகளையும், குரானையும் போற்றுகின்றனர். இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது இரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும். இது பற்றி இறைவன் அவரது திருமறையில், மனித வாழ்க்கையில் அகமும், புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு என்று குறிப்பிடுகிறார். அகமும், புறமும் தூய்மையடைந்து விட்டால் மனிதர்கள் மகான்களாக மாறி விடுவார்கள். உலகிற்கும், தனி மனிதனுக்கும் பயனளிக்கக் கூடிய இத்தகைய மாற்றத்தை மனிதனிடம் ஏற்படுத்துவது தான் இரமலான் திருநாளாகும்.

நோன்புக் காலத்தில் மற்றவர்களுக்கு உதவுதல், காலையில் உட்கொள்ளும் உணவையும், மாலையில் நோன்பு திறந்ததும் உட்கொள்ளும் உணவையும் அனைவரும் பகிர்ந்து உண்ணுதல், யாரிடமும் மோதலில் ஈடுபடாமல் இருத்தல், தீய வார்த்தைகளை பேசாதிருத்தல் ஆகியவற்றை நோன்புக் காலத்தில் இஸ்லாமியர்கள் தவறாமல் கடைபிடிக்கின்றனர். அந்த வகையில் இஸ்லாமியர்களை உன்னதமாக்கும் திருநாளே இரமலான். இந்த உன்னத குணங்களை இஸ்லாமியர்கள் மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.

உலகில் உள்ள அனைவரும் இந்த குணங்களை கடைபிடித்து உன்னதமானவர்களாக மாறலாம். அத்தகையதொரு நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமும் ஆசையும் ஆகும். இஸ்லாம் போதிக்கும் பாடங்கள் மதங்களைக் கடந்தவை. இதை உணர்ந்து உலகில் அமைதி, வளம், மகிழ்ச்சி, கல்வி, வளர்ச்சி நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகுவதற்காக பாடுபடுவதற்கு இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறிக் கொண்டு இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ