தொட்டு பார், சீண்டி பார் என்று பேசுவது முதலமைச்சர் பதவிக்கு உகந்ததா?- அண்ணாமலை
தொட்டு பார், சீண்டி பார் என்று பேசுவது முதலமைச்சர் பதவிக்கு உகந்ததா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நெஞ்சுவலி காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. மாதிரி அடிமைகளை விசாரணை அமைப்புகளைக் காட்டி மிரட்டி அடிப்பணிய வைக்கிறார்கள். தி.மு.க.வினரைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்; இது எச்சரிக்கை. அ.தி.மு.க.வைப் போல் உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் பயப்படுவர்கள் அல்ல தி.மு.க.காரர்கள். மிரட்டிப்பணிய வைக்க நினைத்தால் குனியமாட்டோம்; நிமிர்ந்து நிற்போம்; நேருக்கு நேர் சந்திப்போம்” என வீடியோ வாயிலாக பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தொட்டு பார், சீண்டி பார் என்று பேசுவது முதலமைச்சர் பதவிக்கு உகந்ததா?. யாரை அச்சுறுத்த இத்தனை ஆவேசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்? அனுமதி பெற்றுத்தான் சிபிஐ உள்ளே வர வேண்டும் என்று கூறுவது ஆட்சியின் அவலங்களின் வெளிப்பாடாகவே தெரிகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது எத்தனை முறை சிபிஐ விசாரணை கோரியுள்ளீர்கள் என்பது நினைவு இருக்கிறதா? சட்டத்திட்டங்கள் விசாரணை நடைமுறைகள் தெரிந்த முதலமைச்சர் இப்படி பேசலாமா? 5 கட்சிகள் மாறி வந்த ஒருவரைக் காப்பாற்ற இரண்டாம் கட்ட பேச்சாளர் போல முதலமைச்சர் பேசுவது முறையா?
குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்காக இப்படிப் பொங்குவது முதலமைச்சர் வகிக்கும் பதவிக்கு அழகா? 7 ஆண்டுகளுக்கு முன் கோரிய நடவடிக்கை, தற்போது எடுக்கப்பட்டதை முதலமைச்சர் வரவேற்க வேண்டாமா? எட்டரை கோடி மக்களுக்கான முதல்வரா? அல்லது குறுகிய வட்டத்திற்கான முதல்வரா? மற்றவர்கள் தவறு செய்தபோது சிபிஐ விசாரணை கேட்ட நீங்கள் தற்போது அனுமதி மறுப்பது ஏன்?” என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.