டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து – அண்ணாமலை நன்றி
டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை ஏற்று டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணி நிறுத்தப்படுவதாக நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஸ்ரீ பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். மேலும் நிலக்கரி சுரங்க ஏல பட்டியலில் இருந்து தமிழ்நாடு டெல்டா பகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அமைச்சருக்கும் பிரதமர் மோடிக்கும் தமிழக விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதாக அண்ணாமலை டிவீட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, “விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் பிரதமர் நரேந்திர மோடி. நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக டெல்டா பகுதிகளில் 3 இடங்களில் நிலக்கரி சுரங்கள் அமைப்பது குறித்து மத்திய அரசு ஏல அறிவிப்பாணை வெளியிட்டிருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடதக்கது.