நாகர்கோவிலில் சவாரிக்கு என்று கூறி அழைத்துச் சென்று ஆட்டோ டிரைவர் கிறிஸ்து ராஜை கொலை செய்து அவரிடம் இருந்த பணத்தை எடுத்து சென்ற தந்தை மகன் இருவரும் கைசெய்யப்பட்டனர்.


நாகர்கோவில் ராமன்புதூரைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் ( வயது 54). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். கடந்த 16ஆம் தேதி வீட்டிலிருந்து சவாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கிறிஸ்துதாஸ் இரவு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மறுநாள் கிறிஸ்துராஜ் ஆசாரிப்பள்ளம் இந்திரா நகரில் சாலையோரம் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். உடனே போலீசார் அவரை அங்கிருந்து மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த கிறிஸ்து ராஜ் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். அதனைத் தொடர்ந்து கிறிஸ்துராஜ் சாவு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் கிறிஸ்துராஜ் ரத்த காயங்களுடன் கிடந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் அவரது செல்போன் அழைப்புகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன. அப்போது வடக்கு கோணத்தை சேர்ந்த ஒருவரின் எண் அதில் இருந்தது. அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் இருந்த கொலையை வடக்கு கோணத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் செய்து இருப்பதும் அதற்கு அவரது தந்தை தங்கராஜ் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அருண்குமார் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அருண்குமார் மது குடிப்பதற்காக கிறிஸ்துராஜை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு சென்றார்.
மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது ஆட்டோ டிரைவர் கிறிஸ்து ராஜூக்கு பணத்தைக் கொடுத்த போது அவரது பர்ஸில் நிறைய பணம் இருந்ததை கவனித்த அருண்குமார் அவரிடம் இருந்து பணத்தை பறிக்க திட்டமிட்டார். இதனைத் தொடர்ந்து அவரை இந்திரா நகருக்கு அழைத்துச் சென்று அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டுப் பகுதிக்கு சென்றதும் கிறிஸ்துராஜிடம் இருந்த பணத்தை தரும்படி கேட்டுள்ளார்.

ஆனால் கிறிஸ்துராஜ் பணம் கொடுக்கவில்லை. அதில் அவரை அருண்குமார் கடுமையாக தாக்கியுள்ளார். அதில் மயங்கி விழுந்த கிறிஸ்துராஜை அங்கே போட்டுவிட்டு அவரது பணத்தை எடுத்து விட்டு அவரது செல்போனை மூலம் அருண் குமார் தனது தந்தை தங்கராஜிடம் விபரத்தை கூறி உள்ளார். உடனே தங்கராஜ் வீட்டில் இருந்து வந்து அருண்குமாரை அழைத்து சென்றதுடன் இது தொடர்பான விபரங்களை போலீஸிடம் இருந்து மறைத்து விட்டார். இதனைத் தொடர்ந்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அருண்குமாருடன் அவரது தந்தை தங்கராஜூம் கைது செய்யப்பட்டுள்ளார்.


