சிவப்பு கோடு பட்டை இல்லாத எந்த ஒரு ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளையும் வாங்கக் கூடாது என பொது மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி இருமல் மருந்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டதுடன், அதில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளும் தடை செய்யப்பட்டன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த மாதம் புதுச்சேரியில் பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன் பின்னர், அந்த போலி மருந்துகள் தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து, குறிப்பிட்ட பேட்ச் எண் கொண்ட மருந்துகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதற்கிடையே, பல்வேறு இடங்களில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போலி மருந்துகள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால், மருந்தகங்களில் ஒட்டப்பட்டிருக்கும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் ஆண்டிபயாடிக் மாத்திரைகள் குறித்து தமிழக சுகாதாரத் துறை முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆண்டிபயாடிக் மாத்திரைகளின் அட்டையின் பின்புறத்தில் சிவப்பு கோடு இருந்தால் மட்டுமே அவற்றை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும், சிவப்பு கோடு இல்லாத மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர்களை சந்திக்கும் பிரதமர் – பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை


