Dmkfiles பாகம் 2-ல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம்- அண்ணாமலை
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், நீதிமன்ற ஆணைப்படி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜரானார்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான பின், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, “ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும். தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது. Dmkfiles பாகம் 2-ல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம். திமுக ஊழல் பட்டியல் இரண்டாம் பாகம் பாதயாத்திரை செல்வதற்கு முன்பாக வெளியிடுவேன். பாதயாத்திரையின்போது மூன்று மற்றும் நான்காம் பாகம் வெளியிடுவேன். அண்ணாமலை யாத்திரையில் பங்கேற்க 1½ லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
தன் மீது குற்றம் சாட்டிய மு.க.அழகிரி மீது டி.ஆர்.பாலு வழக்கு தொடராதது ஏன்? டி.ஆர்.பாலு தாக்கல் செய்த மனுவில் அவரது சொத்துக்கள் பற்றிய உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. திமுக எம்பி டிஆர் பாலுவின் குடும்பத்தினரையும் இந்த வழக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். Dmkfiles பாகம் 1-ஐ வெளியிட்ட பின்னரே திமுகவினருக்கு என் மீது கோபம் அதிகரித்தது. அதற்காக நெஞ்சுவலி எனக் கூறி மருத்துவமனையில் சேரமாட்டோம்” என்றார்.