அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல்
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் அவதூறு வழக்கு தொடர்பான மனுவை தாக்கல் செய்தார். அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துகளை அண்ணாமலை கூறியதாக டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அண்ணாமலையின் கருத்துகள் பொய்யானவை என்றும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது என்றும் டி.ஆர். பாலு குறிப்பிட்டுள்ளார்.

டி.ஆர்.பாலு ரூ.10 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விளக்கம் கேட்டு டி.ஆர்.பாலு தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் இல்லை. இதனால் அண்ணாமலை மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே முதலமைச்சர் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.