தமிழ்நாட்டில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகபகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாளை கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வரும் 19ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.