Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம் - உயர்நீதிமன்றம்

அரசு திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம் – உயர்நீதிமன்றம்

-

- Advertisement -

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்த நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.அரசு திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம் - உயர்நீதிமன்றம் அதிமுக கோரிக்கை நிராகரிப்பு

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் மற்றும் சென்னையை சேர்ந்த  அதிமுக வழக்கறிஞர் இனியன் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே பொது நல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அரசு முத்திரை இடம்பெற்றுள்ள நிலையில், அதில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படமும், மு.க.ஸ்டாலினின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

அரசின் திட்டத்தை ஒரு தனி மனித சாதனை போல விளம்பரப்படுத்துவது தவறானது. இந்த திட்டம் முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது. அரசு பணத்தை அரசியல் காரணங்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் சொல்லப்பட்டிருக்கும் தகவலுக்கும், கலைஞர் கருணாநிதி புகைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகையால், கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்தை பயன்படுத்துவது வழிமுறைகளுக்கு எதிரானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தன்னார்வலர்கள் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், திமுகவினர் தான் இந்த திட்டத்தில் அதிகளவில் இருப்பதாகவும் அவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, உங்களுடன் ஸ்டாலின் விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும், உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனு சென்னை   உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸ்வா மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

சிவி சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாரயண், முதல்வரின் முகவரி துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படுவதாகவும், இது உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது என்றும் ஏற்கெனவே இந்த திட்டம் முதலமைச்சர் என்ற பெயரில் இருந்ததாகவும் வாதிட்டார். அரசின் விளம்பரங்களில் அரசியல் கட்சி தலைவர் சின்னங்கள் இடம் பெறக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த திட்ட விளம்பரத்தில் முதல்வரின் பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அரசு பணத்தில் செய்யப்படும் திட்ட விளம்பரத்தில் முதல்வரின் பெயர் ஸ்டாலின்  என்பதை பயன்படுத்த கூடாது என வாதிட்டார். அதே போல ஆகஸ்ட் 2 தேதி தொடங்கப்பட உள்ள மருத்துவ திட்டத்திற்கும் ஸ்டாலின் பெயர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அரசுத் திட்ட விளம்பரங்களை முதலமைச்சர் படம் மட்டுமல்ல துறை அமைச்சர்களின் படங்களை பயன்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள தலைவர்களின் படங்கள் மற்றும் கட்சியின் சின்னம் கொண்ட விளம்பரம் அரசு விளம்பரம்  அல்ல என்று குறிப்பிட்டார். அரசு விளம்பரத்தில் செய்தி விளம்பர துறையின் சீரியல் எண் இருக்கும் என்று நீதிபதிகள் முன்பு சுட்டிக்காட்டினார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே அரசு விளம்பரங்களின் நடைமுறை பின்பற்றப்படும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முதலமைச்சர்  பெயர் இடம் பெறலாம் என தெரிவித்தார்.

திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்,

பொய் வழக்கை தொடர்ந்துள்ளார்கள், அரசியல் உள்நோக்கத்திடன் வழக்கு தொடர்ந்துள்ளார்கள், ஏற்கெனவே கடந்த ஆட்சியில் அம்மா கேன்டீன், அம்மா திட்டம் என தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார். மத்திய அரசு பிரதமர் மோடியின் பெயரில் நமோ என்ற திட்டத்தை தொடங்கியதையும் சுட்டிக்காட்டினார். அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் திட்டம் துவங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு குறித்து தமிழக அரசு, தேர்தல் ஆணையம்,திமுக  பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பத்து நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளனர். அதேசமயம் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ திட்டம் துவங்க தடை விதிக்க முடியாது எனவும் மறுத்துவிட்டனர்.

வைகோவால் கைவிடப்பட்டவர்களே வாருங்கள் – மல்லை சத்யா அழைப்பு

MUST READ