கன்னியாகுமரி மாவட்டம் மேல ஆசாரிப்பள்ளத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் குருசடி விரிவாக்க பணிகளுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு. பங்குத்தந்தை தலைமையில் விரிவாக்க பணிகளுக்கு சென்றவர்களை எதிர்த்தரப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதால் பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மேல ஆசாரிப்பள்ளம் பகுதியில் புனித மிக்கேல் அதிதுதூதர் ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கு மக்களாக இருந்து வருகின்றனர். இந்த ஆலயத்தில் கடந்த சில வருடங்களாக ஆலய பங்குத் தந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் பங்குத்தந்தை ஆலயத்திற்கு வரும் பொது மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ந்து ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆலயத்தின் முன் பகுதியில் அமைந்துள்ள மிகப் பழமையான குருசடியை பங்குத்தந்தை தலைமையிலான நிர்வாகிகள் அப்புறப்படுத்தி புதிய குருசடியை கட்டுவதற்கு இன்று காலை பழைய குருசடியில் முன்பாக பங்குத்தந்தை தலைமையில் பூஜையிலும் ஈடுபட்டனர். அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கோவில் வளாகத்திற்குள் கட்ட முயற்சி செய்துள்ளனர்.
இதற்கு பங்கு தந்தைக்கு எதிரான பொதுமக்கள் அதனை இடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் நாகர்கோவில் ஏ.எஸ்.பி லலித் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
பங்குத் தந்தையின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஒரு தரப்பினர் ஆலயத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பங்குத் தந்தை தரப்பினரும் ஒருபுறம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.