காங்கிரஸ் கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்பு
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர்.
ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியை பறித்து தகுதி நீக்கமும் செய்யப்பட்டது. இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் ராகுல்காந்தி பதவிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர். இதேபோல் ராகுலின் எம்பி பதவி பறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருப்பு உடை அணிந்து பேரவை வந்தனர். ராகுல்காந்தி விவகாரம் தொடர்பாக பேரவையில் நேரம் இல்லா நேரத்தில் பேச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதேபோல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்குள் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு நிற முக கவசம் அணிந்து வந்தனர்.