spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமின் கட்டணம் குறித்த சிறு குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மின் கட்டணம் குறித்த சிறு குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

-

- Advertisement -
மின் கட்டணம் குறித்த சிறு குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
மின் கட்டணம் குறித்த சிறு குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழகத்தில் சுமார் 1.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கும் சிறு குறு தொழில்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டு வருகின்றன. பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் நிலையில் சிறு குறு தொழில்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு மேலும் நெருக்கடிக்கு தள்ளும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டண விகிதங்கள் இருந்து கொண்டிருக்கின்றன.
ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி., சர்ஃபாசி சட்டம், வட்டி விகிதம், எந்திர கொள்முதலுக்கு கொடுத்து வந்த மானியம் வெட்டு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் சிறு-குறு தொழில்கள் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சிறு-குறு தொழில்களுக்கு மின் கட்டண விகித உயர்வு தாங்க முடியாத சுமையாக மாறியுள்ளது.  நிலைக்கட்டணம் நான்கு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டதும், (தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது) உச்சபட்ச பயன்பாட்டு நேரத்திற்கான கட்டணம் விதிக்கப்பட்டதும் எந்த வகையிலும் பொருத்தமான ஏற்பாடு கிடையாது. பல்வேறு காரணங்களால் சிறு- குறு தொழில்கள் நடத்துவோர் ஒரு மாதம் உற்பத்தியே செய்யவில்லை என்றாலும் அவர்கள் நிலைக்கட்டணத்தை செலுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
சில தொழில் நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக இரவு நேரத்தில் மட்டும் உற்பத்தி செய்பவையாக இருக்கின்றன. கடந்த காலத்தில் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்திற்கு கூடுதல் கட்டணம் உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. தற்போது தாழ்வழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் சிறு குறு தொழில்களுக்கு விதிக்கப்பட்டிருப்பது மிகுந்த பாரபட்சமான நடவடிக்கையாகும்.
தமிழகத்தில் முதலீடு செய்ய வரும் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு நிலம், பத்திர பதிவு, முதலீடு, தொழிலாளர் சம்பளம், ஜிஎஸ்டியில் மாநிலத்தின் பங்கு உள்ளிட்டவற்றில் பெருமளவிற்கு மானியங்கள் வழங்கப்படும் நிலையில் எந்த வகையிலும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களோடு போட்டி போட வாய்ப்பில்லாத சிறு குறு தொழில்களைப் பாதிக்கும் வகையில் மின் கட்டண விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு எவ்வித காலதாமதமுமின்றி உடனடியாக நிலைக் கட்டணத்தை பெருமளவிற்கு குறைக்க வேண்டுமெனவும், உச்சபட்ச பயன்பாட்டு நேரத்திற்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இந்தக் கோரிக்கைகளுக்காக அக். 9ம் தேதியும், அதற்குப் பின்னரும் சிறு குறு தொழில் முனைவோர் நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. போராட்டத்திற்கு அவசியமில்லாத வகையில் தொழில் முனைவோர் அமைப்புகளை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

MUST READ