கோடநாடு வழக்கு- ஈபிஎஸ், முக ஸ்டாலின் விவாதம்
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பதில் அளித்தார்.
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை குறித்து காரசார மோதல் நடந்தது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மறைந்த ஜெயலலிதா அம்மையாரின் முகாம் அலுவலகமாகவும், வசித்த இடமாக இருந்ததுதான் கோடநாடு. கோடநாடு வீடு, ஜெயலலிதாவின் வீடு அல்ல, மற்றொருவருடையது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீங்க என்ன செஞ்சீங்க? நாங்க வந்துதான் நடவடிக்கை எடுத்துட்டு இருக்கோம். சட்டம் ஒழுங்கு பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கிறோம். வழக்கு போட்டு இருக்கிறோம், திமுகவினர் மீதே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கவேண்டாம்” என்றார்.
இதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அந்த வீடு வேறொருவருடையது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு கிடையாது. அந்த இடம் அரசு உங்களிடம் தான் இருக்கிறது, விசாரணை நடத்திக் கொள்ளுங்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முகாம் அலுவலகமாகவும், தங்கி ஓய்வு எடுத்த வீடாகவும் இருந்தது” என்று தெரிவித்தார்.