தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் 4 நாட்கள் மதுபான கடைகள் மற்றும் பார்களை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மதுபிரியர்கள் இடையே பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்.23ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாகவும், வாக்கு எண்ணிக்கை நாளன்றும் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 21,22,23 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4 ம் தேதியிலும் மாநிலம் முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட உள்ளன. இதன் காரணமாக, டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் இயங்கும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் இந்த நாட்களில் மூடப்பட வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதற்கு கூடுதலாக, பீர் மற்றும் மது தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை மேற்கொள்வதும், மாநிலத்திற்குள் மதுபானங்களை வாகனங்கள் மூலம் கொண்டு செல்வதும் தடை செய்யப்படும்.
தேர்தல் நேரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்கும், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கச் செய்வதற்குமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தடை அமுல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
