மீன்பிடி தடைகாலம் தொடங்கியது- 61 நாட்கள் மீன்பிடிக்க தடை
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் தொடங்கியதை அடுத்து 61 நாட்களுக்கு கடலுக்குள் மீன் பிடிக்க மற்றும் படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினகளின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி தமிழகத்தின் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் இன்று அமலுக்கு வருகிறது. ஜூன் 14 வரை இந்த தடை அமலில் இருக்கும். இந்த தடைக்காலத்தில் சென்னை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 18 தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்.
இந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளை பராமரித்தல், வலை பின்னுதல் ஆகிய பணிகளை மேற்கொள்வர். இதனையடுத்து சென்னை காசிமேட்டிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள்,இன்று நள்ளிரவிற்குள் கரை திரும்ப வேண்டுமென காசிமேடு மீன்வளதுறையின் இணை இயக்குநர் அஜய் ஆனந்த் விசைப்படகு உரிமையாளர்களை வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காசிமேடு கடற்கரையில் வார்ப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.


