முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களுக்கு ஆய்வு சென்றார். அப்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ராஜேஸ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் பதிவு செய்யப்பட்டது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ராஜேஷ் தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது. வழக்கில் 68 சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் இன்று விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, இந்த வழக்கில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் புஷ்பராணி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாலியல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் முதல் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் ஆவார்.