கீழடி அருங்காட்சியகம்- ஒரே மாதத்தில் ரூ.8 லட்சம் வருவாய்
உலக தரம் வாய்ந்த கீழடி அருங்காட்சியகத்தில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஒரே மாதத்தில் எட்டு லட்ச ரூபாய் பார்வையாளர்கள் நுழைவு கட்டணம் மூலம் வசூலாகியுள்ளது.
கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 18 கோடியே 42 லட்ச ரூபாய் செலவில் 10 கட்டிடங்களுடன் கட்டப்பட்ட அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் மார்ச் 5-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல் ஒரு மாதம் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறியவர்களுக்கு பத்து ரூபாயும், மாணவர்களுக்கு ஐந்து ரூபாயும் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
ஆறு கட்டிட தொகுதிகளில் பண்டைய கால மக்கள் பயன்படுத்திய மண்பாண்ட பொருட்கள், விளையாட்டு காய்கள், அணிகலன்கள், குறியூடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் இருந்தும் பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் பெரியவர்கள் 40 ஆயிரம் பேரும், சிறியவர்கள் 8 ஆயிரம் பேரும், மாணவ, மாணவியர்கள் 11 ஆயிரம் பேரும் வெளிநாட்டினர் 84 பேரும் வந்துள்ளனர்.
இவர்கள் மூலமாக ஏப்ரல் மாதத்தில் மட்டும் 8 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது. இது தமிழக அருங்காட்சியகத்திலேயே அதிகம் என கூறப்படுகிறது. தினசரி வரும் பார்வையாளர்கள் பண்டைய கால பொருட்களை கண்டு ஆச்சர்யப்படுவதுடன் உலக தரத்தில் அருங்காட்சியகம் அமைய பாடுபட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.