தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், குரூப்-2, 2 ஏ பதவிகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர்கள் உள்பட 5,446 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் 9,94,890 பேர் இத்தேர்வினை எழுதிய நிலையில் 57, 641 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.


1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இன்று காலை 9.30 முதல் 12.30 வரை தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வும், மதியம் 2 முதல் 5 மணி வரை பொதுத்தேர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 51,071 பேர் 186 தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 32 தேர்வு மையங்களில் 8,315 பேர் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 27,306 ஆண்களும், 27,764 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்வு எழுதுகின்றனர்.
இந்த நிலையில் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் 10 மணிக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வுகள் தொடங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

துரைபாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் பதிவு எண்கள் மாறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் காலை 9:30 மணிக்கு தொடங்கிருக்க வேண்டிய தேர்வு இன்னும் தொடங்கவில்லை. தேர்வு அறைகளில் காத்திருக்கும் தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பமான சூழல் நிலவுகிறது.
இந்தநிலையில் இதுகுறித்து உடனடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி), எந்தெந்த மையங்களில் தேர்வு தாமதமாக தொடங்கி இருக்கிறது என்கிற உடனடி தகவல்கள் கிடைக்கப்பட்டிருக்கிறது என்றும், அனைத்து மையங்களும் கண்காணிக்கப்பட்டு வருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த மையங்களில் தேர்வு தொடங்குகிறதோ, அந்த மையங்களில் எவ்வளவு நேரம் தாமதமானதோ அத்தகைய கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு குரூப் 2, 2A முதன்மை எழுத்து தேர்வு 20 மாவட்ட தேர்வு மையங்களில் இன்று காலை மற்றும் பிற்பகலில் நடைபெறுகிறது.
வருகை பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவு எண்களின் வரிசையிலும், வினா தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அந்நிலை சரி செய்யப்பட்டு தேர்வு அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

இந்த சூழலில் அதனை ஈடு செய்யும் வகையில் மதியத் தேர்வில் நேரம் மாற்றம் செய்யப்பட்டு 02:30 மணிக்கு தொடங்கி 05:30 மணி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


